Kongu Nadu: தமிழ்நாட்டை பிரிக்கும் திட்டம் எதுவுமில்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உறுதி!
தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒருங்கிணைத்து கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க.வினர் சிலர் கருத்து தெரிவித்தனர். பா.ஜ.க.வினர் இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. பின்னர், கொங்குநாடு என்பது பா.ஜ.க.வின் சொந்த கருத்து இல்லை என்று பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கொங்குநாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்தார். அப்போது, அவர் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
முன்னதாக, தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்த எல்,முருகன், மத்திய இணையமைச்சராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, மத்திய அரசு தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எல்.முருகனின் சொந்த ஊர் என்று நாமக்கல் என்று குறிப்பிட்டு, கொங்குநாடு என்று அறிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கி கொங்குநாடு என்ற தனிமாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கொங்குநாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
தி.மு.க.வினர் ஒன்றிய அரசு என்று ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மத்திய அரசை அழைத்து வந்ததற்கு எதிர்வினையாகதான் மத்திய அரசும், பா.ஜ.க.வினர் கொங்குநாடு விவகாரத்தை கையில் எடுத்ததாக தி.மு.க.வினர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் விடமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் கொங்குநாடு தனிநாடு என்ற கருத்துக்கு தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டை பிரிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.