சமத்துவமா? சங்கடமா? இருபாலருக்கும் ஒரே சீருடை: ஆசிரியர்கள், மாணவிகள் சொல்வது என்ன?
ஆடைகளில் இல்லை சமத்துவம், அரசு கொடுக்கும் கல்வியில், அதன்மூலம் கிடைக்கும் வேலை, பொருளாதாரச் சுதந்திரத்தில்தான் பாலினச் சமத்துவம் இருக்கிறது.
உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம் குறித்த விவாதம் பரவலாகி வருகிறது. ஆண் - பெண் என்ற பாலின பேதத்தைப் போக்க பல்வேறு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முன்னோடி மாநிலமான கேரளத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று கடந்த 2018ஆம் ஆண்டு, பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடைகளை அறிமுகப்படுத்தியது. எர்ணாகுளத்தில், வளையஞ்சிரங்கரா அரசு தொடக்கப் பள்ளியில் இந்த முன்னுதாரண முன்னெடுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் பெற்றோர்கள் சிலரிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கேரள மாநிலத்திலும் மாநிலத்துக்கு வெளியேயும் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பலுசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலின பேதமில்லாமல், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் 60 மாணவர்களைப் போலவே 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் சட்டையும் பேண்ட்டும் அணிந்துகொண்டு இன்று (டிச.15) பள்ளிக்கு வந்தனர். எனினும் இதற்கு முஸ்லிம் மாணவர் சங்கம் எதிர்ப்பைத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டது.
தற்போது ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் அடுத்த கல்வி ஆண்டு முதல் 48 பள்ளிகளில், பாலின சமத்துவ சீருடைகளை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித்துறையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஆடைகளில் சமத்துவம் என்பதைப் பாலினச் சமத்துவமாக எடுத்துக்கொள்ளலாமா? இருபாலருக்கும் ஒரே சீருடை என்பது சமத்துவத்தை ஏற்படுத்துமா? சங்கடத்தை உருவாக்குமா?
இதுகுறித்துப் பல ஆண்டுகளாக மாணவர்களைப் போலவே பள்ளிக்கு சீருடை அணிந்துவரும் ஜவ்வாதுமலை அரசு பழங்குடியினர் நலப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி 'ஏபிபி' செய்தி நிறுவனத்திடம் பேசினார். அவர் கூறும்போது, ''சீருடை என்பதையே சமத்துவத்துக்கான குறியீடாகப் பார்க்கிறேன். குழந்தைகளின் சீருடையிலேயே ஆசிரியர்களும் வரும்போது அவர்கள் இருவருக்கான உறவு மேம்படும்.
பெண் ஆசிரியர்களின் அன்றாட உடைகளைப் பார்த்து மாணவிகளின் கேள்விகளும் ஏக்கமும், கவனச் சிதறலும் குறையும். என்னுடைய குழந்தைகள் என்னிடம் சீருடை அணியச் சொன்னபோது இவற்றைத்தான் சொன்னார்கள். அதைப் பின்பற்றியே, நான் சீருடை அணிந்து வருகிறேன். பள்ளிக்கு சேலை கட்டி வருவதால் நடனமாடும்போதும், கரும்பலகையில் எழுதும்போதும் ஏற்படும் இடையூறுகள் இதனால் குறைந்தன.
அதேபோல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடைகளைக் கொண்டுவரலாம். 5-ம் வகுப்பு வரை இருபாலருக்கும் பொதுவான சட்டையும் பேண்ட்டும் கொண்டு வரலாம். மேல் வகுப்புகளில் மாணவிகளுக்கு சுடிதாரே வசதியாக இருக்கும். தேவைப்பட்டால் பேண்ட் - சட்டையுடன் மேல் கோட்டைக் கூடுதலாகக் கொண்டுவரலாம். எனினும் குழந்தைகளின் கருத்தையும் கேட்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது அவசியம்'' என்று ஆசிரியை மகாலட்சுமி தெரிவித்தார்.
மாணவர்களைப் போலவே எங்களுக்கும் அதே உடை வசதியாக இருக்கும் என்கிறார் சென்னை பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவி காயத்ரி. அவர் கூறும்போது, ''நாங்கள் மேற்கத்திய ஆடைகளை அணிந்து பழகிவிட்டதால், சீருடையிலும் பேண்ட் சட்டையைக் கொண்டு வரலாம். அதில் எந்த சிரமமும் இருக்காது. புத்துணர்ச்சியுடனேயே இருக்கும். கேரள அரசின் முயற்சியை வரவேற்கிறோம்'' என்று தெரிவித்தார்.
ஆனால், ஆடைகளில் இல்லை சமத்துவம், அரசு கொடுக்கும் கல்வியில், அதன்மூலம் கிடைக்கும் வேலை, பொருளாதாரச் சுதந்திரத்தில்தான் பாலினச் சமத்துவம் இருக்கிறது என்கிறார் நீட் தேர்வை எதிர்த்து அரசுப் பள்ளி ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவரும் கல்வியாளருமான சபரிமாலா. அவர் கூறும்போது, ''பாலின சமத்துவம் என்பது பாலியல் கல்வியைக் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும். ஆண், பெண் வேறுபாடு, உடல் உறுப்புகள் குறித்து கற்பிக்க வேண்டும். ஹார்மோன் தூண்டலின்போது, அதைத்தாண்டி லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் என்று கற்பிக்க வேண்டும்.
பாலின சமத்துவம் என்பது ஆடைகளிலா இருக்கிறது, அவ்வாறு உள்ளதெனில் பெண்களின் உடைகளை ஆணை அணியவைத்துச் சமத்துவத்தை எழுப்பலாமே? ஓர் ஆளுமையாக, அதிகாரத் தளங்களில், சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் சம எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும் என்பதே பாலினச் சமத்துவம்.
பருவ வயதில், பெண்களின் மார்பகங்கள், கருப்பை வளர்ச்சி அடையும் தருணத்தில், இறுக்கமான பேண்ட் சட்டை அணிய வேண்டியது தேவையா, மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தாதா என்று மருத்துவர்களிடமும் உளவியலாளர்களிடமும் கருத்துப் பெற வேண்டியது அவசியம். ஆடைகளில் பாலினச் சமத்துவம் நிச்சயமாக இல்லை'' என்கிறார் சபரிமாலா.