பணம் கொடுத்து ஏமாத்தலாம்னு பாக்குறாங்க.. என் மகன் உடலை வாங்கமாட்டேன்.. கவினின் தந்தை ஆதங்கம்
பணம் கொடுத்துட்டா போய்டுவோம்னு நினைக்கிறாங்க என கவினின் தந்தை கண்ணீர் மல்க ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கவின் செல்வகணேஷ் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தம்பி சுர்ஜித் (24), கவினை கொடூரமாக கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல் ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி, தந்தை சரவணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. மேலும், சுர்ஜித் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கவின் செல்வகணேஷின் அளித்த பேட்டி கண்ணீரை வரவழைத்துள்ளது.
மகனை பறிகொடுத்த தந்தை அளித்த பேட்டியில், எனது மகன் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கிறான். என் பையன் காதலிக்கும் பெண்ணின் பெற்றோர் காவல் துறையில் பெரிய பதவியில் இருப்பவர்கள். அவர்களது உதவியோடு தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கொலை நடந்து 3 நாட்கள் ஆகிறது. சஸ்பெண்ட் செய்ய முடிந்த போலீசுக்கு அவர்களை கைது செய்ய முடியாதா?. அப்போ எங்களுக்கு ஒரு நீதி போலீசுக்கு ஒரு நீதியா? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் பேசிய அவர், காவல்துறை அவர்களுக்கு உதவி செய்கிறது. இதுவரை பெரிய அதிகாரிங்க யாருமே வரலை. பணத்தை கொடுத்து ஏமாத்தலாம்னு பாக்குறாங்க. எனக்கு நீதி கிடைக்கவில்லை. பணம் கொடுத்தா வாங்கிட்டு போய்டுவோம்னு நினைக்கிறாங்க. என் மகன் கவினோட உடலை ஒரு மாதம் கழித்து பார்த்துக்குவேன். ஆனால், எனக்கு தேவை நீதிதான் வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். காவல்துறை கண்முன்னே ஆணவக்கொலை நடக்கும் போது என்ன காவல்துறை இது என கண்ணீர் மல்க பேசினார்.





















