கரூர்: இறந்தவர் உடலை ஆற்றுவாரியில் தூக்கி செல்லும் அவல நிலை - உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆற்றுவாரியானது பொம்மாநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, கள்ளை வழியாக புரசம்பட்டி ஆற்றுவாரிக்கு செல்கிறது.
கரூர் மாவட்டம் தோகமலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவில் வசிக்கும் பொதுமக்களின் மயான காட்டிற்கு செல்லும் சாலையில் உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினருக்கான மயானம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆற்றுவாரியானது பொம்மாநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, கள்ளை வழியாக புரசம்பட்டி ஆற்றுவாரிக்கு செல்கிறது. ஆனால் ஆற்றுவாரியை கடந்து செல்வதற்கு உயர்மட்ட (மேல்மட்ட) பாலம் வசதி இல்லை.
இதனால் மழைக்காலங்களில் பொம்மாநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீர் இந்த ஆற்று வாரியில் அதிகமாக செல்வதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். அப்போது இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து ஆற்றுவாரியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2000 ஆண்டிற்கு பிறகு போதிய மழை இல்லாமல் இந்த ஆற்றுவாரியில் வெள்ள நீர் வராமல் இருந்து வந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் வழியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் மறந்துவிட்டனர்.
கடந்த ஆண்டு அதிகமான மழை பெய்தது. அப்போது ஆற்றுவாரியில் அதிகமான காற்றாற்று தண்ணீர் வந்தது. இதே போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோகமலை வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் இந்த ஆற்றுவாரியில் காட்டாற்று தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதே போல் இந்த ஆற்றுவாரியில் தடுப்பணைகளும் அமைந்துள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் முருகன் என்பவர் உடல் நிலை குறைவால் இறந்தார். இவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மிகுந்த சிரமத்திற்கு இடையே இளைஞர்களின் உதவியுடன் இறந்தவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இதனால் பொம்மாநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் பொது மக்கள் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுவாரியில் உயர்மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்