கரூரில் வட்டாட்சியர் முன்னிலையில் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கரூர் கடவூர் கொசூர் கடைவீதி பகுதியில் மத்தகிரி ஊராட்சி 1. 35 ஏக்கர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு சொந்தமான 48 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள் கட்டப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே கொசூர் கடைவீதி பகுதியில் இரண்டு ஏக்கர் அளவிலான வணிக ரீதியான ஆக்கிரமிப்பு கடைகள் வட்டாட்சியர் முன்னிலையில் மீட்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே கொசூர் கடைவீதி பகுதியில் மத்தகிரி ஊராட்சி 1.35 ஏக்கர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 48 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள் கட்டப்பட்டுள்ளன. தோகைமலை - பாளையம் சாலையில் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டதால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகற்ற வந்துள்ளது.
அப்போது ஆக்கிரமித்து கடையை கட்டி இருந்ததால் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றை தடை செய்ய வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டதில் அரசு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வணிக ரீதியிலாக இவர்கள் கடையை கட்டி உள்ளனர் என்று கூறியதை அடுத்து நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அதற்கு 8 வாரம் கால அவகாசத்திற்குள் அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டுமெனவும், அகற்றாவிடில் வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டார். கொசூர் கடைவீதி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 கடை உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே அகற்றுவதற்கான நோட்டீஸ் கடந்த எட்டு வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுடன் அந்த எட்டு வாரம் கால அவகாசம் முடிவடைந்தது. இதனையடுத்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறையினர் உதவியுடன் வந்தனர். அப்போது அங்கு கடை நடத்தி வந்த ராஜேஷ் மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரும் தங்களது கடைகளை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக்கொள்ள முயன்றனர். உடனே அவர்களை தடுத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது இருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாதுகாப்பிற்காக குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.