அரவக்குறிச்சி அருகே அரசுப் பள்ளியில் திடீர் தீ விபத்து - காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் எரிந்து நாசம்
காலாண்டு, முதல் பருவத்தேர்வு விடைத்தாள்கள், ஆசிரியர்கள் அமரும் மேஜை, நாற்காலிகள் எரிந்து சாம்பலாயின.
அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள், ஆசிரியர்கள் அமரும் மேஜை, நாற்காலிகள், எரிந்து நாசமாயின. தீ வைத்தது மர்ம நபர்களா அல்லது மாணவர்களா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிக் கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று திடீரென பள்ளியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சென்றுப் பார்த்தப்போது ஆசிரியர்கள் (Staff room) ஓய்வறையில் இருந்து தீப்பிடித்து எரிவது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள், சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் உதவியுடன் அங்கிருந்து தண்ணீரை ஊற்றி தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மாணவர்களின் காலாண்டு, முதல் பருவத்தேர்வு விடைத்தாள்கள், ஆசிரியர்கள் அமரும் மேஜை, நாற்காலிகள், எரிந்து சாம்பலாயின. ஆசிரியர்களின் (Staff room) இரண்டு அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டும், குடிநீர் குழாய்கள் உடைந்து இருப்பதால் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா அல்லது மாணவர்கள் யாரேனும் தீ வைத்துள்ளனரா என அரவக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் தீ விபத்து நடந்துள்ளதால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தப்பினர். அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைத்தனர்.