Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கல்.. கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Karur Stampede: ஜாமீன் கிடைத்ததை அடுத்து வழக்கறிஞர்களுக்கு தவெக நிர்வாகிகளும், மதியழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினரும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கரூர் கூட்ட நெரிசலில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தவெக நீர்வாகிகள்:
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் நேற்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்று இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முன்னிலையில் எஸ்ஐடி தரப்பு வழக்கறிஞரும், தவெக தரப்பு வழக்கறிஞரும் காரசார விவாதங்களை முன் வைத்தனர்.
வழக்கு விசாரணை
முதலில் பேசிய எஸ்.ஐ.டி தரப்பு வழக்கறிஞர், சிபிஐ இயக்குநர் விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க முடியும். அதுவரை காவல் நீட்டிப்பு வேண்டும். சிபிஐ அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று சிறப்பு புலனாய்வு குழு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.
காவல் நீட்டிப்பு கேக்குறாங்க என்ன சொல்றீங்க என நீதிபதி மதியழகனிடம் கேள்வி எழுப்பியபோது, நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என மதியழகன் பதிலளித்தார்.
தவெக தரப்பு வாதம்:
அதனை தொடர்ந்து தவெக வழக்கறிஞர் வாதத்தை தொடங்கினார்.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி SIT கலைக்கப்பட்டது. அதனால் காவல் நீட்டிப்பு கேட்பது தவறு என்றும் SIT சேகரித்த ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடவில்லை.
CBI வசம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களையும், வாக்குமூலங்களையும் அதிகாரம் இல்லாத நிலையில், SIT எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.
SIT சார்பாக காவல் நீட்டிப்பு கேட்பது சட்டவிரோதம். சிபிஐ விசாரணையின்போது, மதியழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம். தினமும் நீதிமன்றம் வந்து கையெழுத்து போடுகிறோம் என தவெக தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
ஜாமீன் வழங்கல்:
இதையடுத்து கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவருக்கும் காவல் நீட்டிப்பு இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக இருவரும் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதியின் உத்தரவு நகல் வெளியான பிறகு, சிறை நடவடிக்கைகள் முடிந்த பிறகு நாளை இருவரும் வெளியே வருவார்கள் என தவெக தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து வழக்கறிஞர்களுக்கு தவெக நிர்வாகிகளும், மதியழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினரும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






















