யாகம் வளர்த்ததில் வந்த புகை... கூடு கட்டி இருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டிய சம்பவத்தால் பரபரப்பு
தேனீக்கள் கொட்டியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் சென்று பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்து, வயதான 6 நபர்களையும் பத்திரமாக மீட்டனர்.
கரூர் அருகே பெருமாள் ஆலயத்தில் யாகம் வளர்த்ததில் மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் வயது முதிர்ந்த பக்தர்களை விடாமல் துரத்தி கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், கவச உடைய அணிந்து தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கரூர் மாவட்டம், நெரூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பெருமாள் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக கும்பகோணத்தை சார்ந்த சீனிவாசன் ராகவன் 85, லலிதா 81, ஹரீஸ் 40, ராமகிருஷ்ணன் 62 ,செல்லமால் 70 , சுப்பிரமணி 58 ஆகிய 6 பக்தர்கள் சென்றுள்ளனர். அப்போது கோவில் வளாகத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்தபோது வந்த புகையால் அங்கிருந்த மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவர்களை சூழ்ந்து கொட்டியுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் சென்று பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்து, வயதான 6 நபர்களையும் பத்திரமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.