அறநிலையத்துறை அனுமதியின்றி கம்பி வேலி அமைத்த ஊர் பொதுமக்கள் - கரூர் அருகே பரபரப்பு
15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார்
கரூர் அருகே கோயில் நிலத்தில் அறநிலையத்துறை அனுமதியின்றி கம்பி வேலி அமைத்த ஊர் பொதுமக்கள். வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகிலுள்ள மேதி நகரில் அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நிலத்துக்கு அருகில் அமைந்துள்ள மேதி நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதி இளைஞர்கள் விளையாடுவதற்கு மைதானம் வேண்டும் என்று கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் சுமார் 1 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி வேலி அமைத்துள்ளனர்.
அனுமதியின்றி அப்பகுதியினர் கோவில் நிலத்தில் வேலி அமைத்தது குறித்த தகவல் அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் வாங்கல் காவல் நிலைய போலீசார் உதவியுடன் வேலியை அப்புறப்படுத்த வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேதி நகர் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் பொதுமக்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட வேலி அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.