கரூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை
தாளப்பட்டி ஊராட்சி செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
கரூரில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை செங்காலி பாளையத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோயம்பள்ளி ஆதிதிராவிடர் காலணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பீட்டில் 2022-23 ஆம் ஆண்டு திட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழல் குடையை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கோயம்பள்ளி கடைவீதி பகுதியில் பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையை 2023-24ம் ஆண்டு AGAMT திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த ரேஷன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மயில்ராஜ், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, கரூர் ஊராட்சி ஒன்றிய குழுஉறுப்பினர் மணவாளன், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.