கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் பரவல் காரணமாக தேர்பவனி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிக சிறப்பாக பங்குனி தேரோட்டம் நடைபெற்றது
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெரும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் தாக்கத்தால் ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் கடந்த 10ஆம் தேதி ஆலயத்தில் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பிறகு, நாள்தோறும் யானை, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா இரவு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது.
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் கடந்த வியாழக்கிழமை ஆலய மண்டபத்தில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மணக்கோலத்தில் காட்சி அளிக்கும்படி செய்திருந்தனர். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்ற பின்னர் பால், பழம் மற்றும் மொய் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அடுத்து முக்கிய நிகழ்வாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் கல்யாணபசுபதீஸ்வரர் அலங்காரவல்லி சௌந்தரநாயகி கணபதி பாலமுருகன் வள்ளி-தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்திலிருந்து ஆலய வாசலில் இருக்கும் தேருக்கு சுவாமியை தூக்கிச் சென்றனர்.
கல்யாணபசுபதீஸ்வரர் செயல் அலுவலர் மற்றும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலையில் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்ட பிறகு, கங்கானம் கட்டப்பட்ட பின்னர், தேங்காய் உடைக்க பிறகு கூடியிருந்த பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்தவாறு அரோகரா முழக்கத்தை எழுப்பினர். பின்னர் ஆலய வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் வழியாக தேர்பவனி நடைபெற்றது. பங்குனி தேர் நிகழ்ச்சியை கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புகழ்பெற்ற கல்யாணபசுபதீஸ்வரர் மனமுருகி வழிபட்டனர். பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சுற்றி பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.
கரூர் நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் பரவல் காரணமாக தேர்பவனி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிக சிறப்பாக பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.