கரூர் கலெக்டர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது
கரூர் மாவட்ட ஆட்சியர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது . இந்த கார் தற்போது பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் உடைத்து எடைக்கு போட ஏலம் எடுத்தவர் முடிவு செய்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியருக்காக கடந்த 2004ம் ஆண்டு அம்பாசிடர் கார் வாங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பயன்பாட்டிற்கான வாகனம் முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டு பொது ஏலம் நடைபெறும் என கடந்த 5ம் தேதி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 2000 ரூபாய் முன் வைப்பு தொகை கட்டி 29 ஏலம் எடுப்பவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில் நடைபெற்றது. அரசின் சார்பில் 22 ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலையாக வைக்கப்பட்டது. 200 ரூபாயாக படிப்படியாக ஏலம் கேட்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 15 சுற்றுகளாக ஏலம் கேட்கப்பட்ட நிலையில் 16வது சுற்றாக 25000 ரூபாய்க்கு 26வது டோக்கன் பெற்ற ஆர்த்தி டிரேடர்ஸ் சார்பில் ஹரிஹரன் என்பவர் ஏலம் எடுத்தார். இவரை தவிர இதற்கு மேல் ஏலம் கேட்கப்படாததால் அவருக்கு வழங்க உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொகைக்கான ஜி.எஸ்.டி வரியுடன் பணத்தை பெற்றுக் கொண்டு பழைய அம்பாசிடர் காரை வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அப்போது ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி இந்த காரை பயன்படுத்தினார். இந்த கார் தற்போது இயக்க முடியாத நிலையில் இருப்பதால் இவற்றை எடுத்துச் சென்று இரும்பை உடைத்து எடைக்கு விற்பனை செய்ய இருப்பதாக ஏலம் எடுத்தவர் தெரிவித்தார்.
வாகன நெரிசலை தவிர்க்க சாலைகளில் எல்லைக்கோடு வரையப்படுமா?
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க,வாகனங்களை சரியாக நிறுத்தும் வகையில், பெயிண்ட் மூலம் எல்லை கோடுகள் வரைய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஜவகர் பஜார்,கோவை சாலை, திண்ணப்ப கார்னர் சாலை மற்றும் லைட் ஹவுஸ் கார்னர் சாலைகளில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள்,ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால், அந்த சாலைகளில் கார், டூவீலர், வேன் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள்,நீண்ட நேரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கரூர் நகரில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில், கரூர் நகரப் பகுதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதிகளில் நிறுத்தும் வகையில்,போக்குவரத்து போலீசார் சார்பில்,சில மாதங்களுக்கு முன் சாலைகளில் பெயிண்ட் மூலம் எல்லை கோடுகள் வரையப்பட்டன. தற்போது, அந்த கோடுகள் அழிந்துவிட்டது. இதனால், பொதுமக்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால்,கரூர் நகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகரின் முக்கிய சாலைகளில்,புதிதாக வெள்ளை கோடுகள் வரைந்து,வாகனங்களை முறையாக நிறுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.