‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்
ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் அரசு செய்த நலத்திட்டங்களுக்கு கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளே சாட்சி என கரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர், திருமாநிலையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 80,750 எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான பயன்கள் நலத்திட்ட உதவியாக வழங்கி, 99 எண்ணிக்கையிலான ரூ.581.44 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 95 எண்ணிக்கையிலான ரூ.28.60 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
முன்னதாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடைபெறும் திருமாநிலையூர் அரங்கத்திற்கு வரும் வழியெங்கும், 23 இடங்களில் முதல்வருக்கு சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா அரங்கில் தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை முதலமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து விழா அரங்கில் பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். தமிழக முதல்வருக்கு மின்சாரத்துறை அமைச்சர் வெள்ளி வாழ் பரிசளித்தார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:
உங்களையெல்லாம் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருக்க நினைக்கிறேன்.கடலலை போல் திரண்டுள்ளனர். கடலில்லாத கரூரில் மக்கள் கடலை வரவழைத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. எப்போதும், எதையும் பிரம்மாண்டமாக செய்யக்கூடியவர் செந்தில்பாலாஜி. பணிகளுக்கு டார்கெட் வைத்து அதை முடித்து காட்டுபவர் செந்தில்பாலாஜி.
அதற்காக பலமுறை என்னிடம் பாராட்டு பெற்றவர். 1 இலட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் செய்து காட்டியவர். கரூர் மற்றும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக சாதித்து வருகிறார். கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. இதை செய்து செய்து காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
சுமார் 1000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று திட்டங்கள் தொடங்கப்பட்டது. அதுவும் பிரம்மாண்டம். ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் அரசு செய்த நலத்திட்டங்களுக்கு கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளே சாட்சி. உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் தலைவர் கலைஞர் என்னுள் இருந்து செயல்படுகிறார். அவர் இருந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பாரோ, அவ்வாறு செயல்பட்டு வருகிறோம். கரூரில் செய்யப்படும் என்று கூறிய திட்டங்கள், ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பணிகள் நடைபெற்று வருகிறது.
கரூரின் பெருமையான டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழில் வளர்ச்சியடைய சிப்காட் அறிவிக்கப்பட்டு, பணி தொடங்கப்படவுள்ளது. கரூரில் டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்கள் வைத்த கோரிக்கை ஏற்று பிரம்மாண்டம் காட்சி அரங்கம் அமைக்கப்படும். பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும். 47 கோடியில் திருமாநிலையூர் விரைவில், பல ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்நு நிலையம் அமைக்கப்படும்.
மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. அதனால் வீண் விமர்சனங்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதில் கொடுப்பத்தில்லை. யார் யாரிடமோ ஊடகத்துறையினர் மைக்கை நீட்டி கேள்வி கேட்கிறீர்கள். உரிமையுடன் கேட்கிறேன் ஆட்சி குறித்து மக்களிடம் கேளுங்கள். இருப்பை காட்டுவதற்காக மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூறமாட்டேன். கோடிக்கணக்கான மக்களின் வீட்டில் அறிவு என்னும் விளக்கு ஏற்ற வந்துள்ளேன் என்றார்.
விழா மேடையில் தமிழக முதல்வருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் எம்பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்