(Source: ECI/ABP News/ABP Majha)
பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த கரூர் மேயர்! அலறிய கடை உரிமையாளர்கள்! காரணம் என்ன?
பஸ்கள் வெளியில் செல்லும் பகுதியின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு, பஸ்நிலையத்தின் பின்பக்கத்தில் உள்ள சாலையில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு மாலைக்குள் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கரூர் நகரில் பல இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வில் மேயருடன் மண்டலத்தலைவர் அன்பரசன், கவுன்சிலர் நிர்மலாதேவி, பொறியாளர் நக்கீரன், நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் பஸ்நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூாட்டும் அறையை பார்வையிட்டு அதில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள இலவச நவீன கழிப்பிடத்தை பார்வையிட்ட மேயரிடம் அங்கு துர்நாற்றம் எப்போதும் வீசுவதாக பயணிகளும், போக்குவரத்துகழக ஊழியர்களும், தெரிவித்தனர். தண்ணீர் பற்றாக்குறை தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். தண்ணீர் அதிக அளவில் தருவதற்கான பணி மேற்கொள்ளப்படும். பஸ்நிலைய வாயிலில் உள்ள சாக்கடை அடைத்த நிலையில் இருப்பதை உடன் தூர்வாரி தண்ணீர் வேகமாக செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தர விட்டார்.
மினி பஸ்நிலையத்தில் செயல்பட்டு வரும் கழிப்பிடத்தையும் பார்வையிட்டு அதனையும் சீரமைத்திட உத்தரவிட்டார். பின்னர் பஸ்நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்ட மேயர் மார்கெட்டின் வெளிபக்க சுவர் ஓரமாக பழக்கடைகள் வைத்திருப்பதையும், பஸ்நிலையத்தில் இருந்து மினி பஸ்நிலையத்திற்கு செல்லும் பாதை முழுவதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் பார்வையிட்டார்.
மேலும் பஸ்கள் வெளியில் செல்லும் பகுதியின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு, பஸ் நிலையத்தின் பின்பக்கத்தில் உள்ள சாலையில் தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றை மாலைக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், அந்த பகுதியில் சாக்கடை மேல் பகுதியில் ஓட்டல் அடுப்பு வைக்கப்பட்டிருப்பதை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கொள்ள உத்தரவிட்டார். ஆய்வு குறித்து நிருபர்களிடம் மேயர் கவிதா கூறியதாவது:
பொதுமக்கள் அளித்த பல புகாரின் அடிப்படையில் இன்று பஸ்நிலையத்தை ஆய்வு செய்தோம். பஸ்நிலையத்தின் வாயிலில் மீண்டும் சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்க திட்ட மிட்டுள்ளோம். மாநகராட்சியில் பல கடைக்காரர்கள் உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. பஸ்நிலையத்தில் எத்தனை கடைகள் உள்ளது. அவர்கள் மாநகராட்சிக்கு தரவேண்டிய வாடகை தொகை நிலுவை எவ்வளவு உள்ளது. வரிபாக்கி எவ்வளவு உள்ளது என்று புள்ளி விபரங்களை வருவாய்த்துறையிடம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகளின் மீது வழக்கு நடந்து வந்தால், வழக்கு முடிந்து வந்த பின்னர் அவர்கள் கடையை திறந்து வியாபாரம் செய்யட்டும், அதுவரை கடைகளுக்கு சீல் வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆய்வில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளோம் அவை முறைப்படி அகற்றப்படும் என்று கூறினார்.