(Source: Poll of Polls)
செஸ் போட்டியில் அசத்தும் சிறுமி கேட்ட உதவி; உதவ முன்வந்த "நாங்களும் இருக்கிறோம்"
ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த "நாங்களும் இருக்கிறோம்" என்ற தனியார் தொண்டு நிறுவனம் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளனர்.
கரூரில் 60க்கும் மேற்பட்ட செஸ் போட்டிகளில் விளையாடி பல பரிசுகளை வென்ற 10 வயது சிறுமிக்கு பொருளாதார உதவி கேட்டு கோரிக்கை வைத்த பெற்றோர். ஊடகங்களில் வெளியான செய்தியை கண்டு உதவும் முன்வந்த தொண்டு நிறுவனம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை, காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ். தச்சுத் தொழிலாளியான இவருக்கு அனிதா தேவி என்ற மனைவியும், யாழினி என்கின்ற 10 வயது மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். யாழினி அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்திற்கு பிறகு சிறுமி யாழினியை அவரது பெற்றோர் செஸ் விளையாட்டை கற்றுக் கொள்ள பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர். யாழினியின் சிறப்பான ஆட்டத்தையும், அவரது ஆர்வத்தையும் பார்த்த பயிற்சியாளர்கள் அவருக்கு சிறப்பான பயிற்சி அளித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கரூர், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளிலும், வெளி மாநிலங்களில் நடந்த அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்று பல பதக்கங்களையும், கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்று வீட்டில் குவித்து வைத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் 2 சர்வதேச போட்டிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். தந்தைக்கு போதிய வருமானம் இல்லாததன் காரணமாக போட்டிக்கு சென்று வரக் கூடிய செலவு கூட கடன் வாங்கிச் செல்லும் நிலை உள்ளதால், மாணவிக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் மற்றும் போட்டிகளுக்கு சென்று வருவதற்கு தமிழக அரசும் அல்லது தனியார் நிறுவனங்களும் பொருளாதார உதவி செய்தால் சிறுமி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பல விருதுகளை பெற்றுத் தருவார் என பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த "நாங்களும் இருக்கிறோம்" என்ற தனியார் தொண்டு நிறுவனம் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளனர். சிறுமி யாழினியின் வீட்டுக்கு சென்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிறுமிக்கு இனிப்பு கொடுத்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமி அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு சென்று வருவதற்கான அனைத்து வசதிகளையும், பொருளாதார உதவிகளையும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, சிறுமியையும் அவரது பெற்றோரையும் ஊக்கப்படுத்தினர். ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி அறிந்து தனியார் தொண்டு நிறுவனம் தங்களுக்கு உதவ முன் வந்ததற்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.