DMK Meeting: கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்... வரும் 20-ல் திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக்கூட்டம் ....
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தமிழக வருகை, உள்ளிட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரூ.250 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கைகளுடன் கூடிய சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மக்கள் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளது. அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று, ஜூன் மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். மேலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க விழாவிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு
மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜுன் மாதம் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கட்டது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, ”அறிவை விரிவாக்கும் வகையில் சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த முயற்சியை வரும் ஆண்டில் ரூ.10 கோடி நிதியில் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதலாவது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 24 நாடுகளின் பங்கேற்புடன் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.
மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன், நவீன வசதிகளை கொண்ட பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வு எழுதுபவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் இருக்கும். போட்டித்தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப்பிரிவு, பார்வைத்திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதியுடன் அரங்குகள், கருணாநிதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவை இடம் பெறும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரை தாங்கி வரும் ஜுன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.