Karnataka hijab Row: “எது முதன்மையானது? நாடா; மதமா? ஹிஜாப் பின்னால் செல்வது அதிர்ச்சி அளிக்கிறது” - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
கர்நாடாகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணை வருகின்றது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சனாதன தர்மத்தை நம்புபவர்களை மட்டும் இந்துக் கோயில்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், நாத்திகர்கள் கோயில்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கருத்து கூறியுள்ளார். “எது முதன்மையானது, நாடு அல்லது மதம். யாரோ ஒருவர் ஹிஜாப் பின்னால் செல்வதும், யாரோ ஒருவர் வேட்டிக்காக பின்னால் செல்வதும் அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு தேசமா அல்லது மதத்தால் பிளவுபட்டதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, ஷார்ட்ஸ் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் மனுதாரர் வாதிட்ட போது, பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘கடந்த 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை. கடந்த 1970ஆம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்க கூடாது. கோயில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கோயில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடாகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணை வருகின்றது. 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு விசாரிக்கின்றது.
இதனிடையே, ஹிஜாப் விவகாரத்தை உடனே விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் முறையீட்டுள்ளார். 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்