(Source: ECI/ABP News/ABP Majha)
கரிகால சோழனுக்கு தை 2ஆம் நாளில் அரசு விழா எடுக்க வேண்டும் - காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
''கர்நாடகாவில் அணையை கட்டியே தீருவோம் என கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்து ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது''
கரிகால் சோழனுக்கு தை இரண்டாம் நாளில் அரசு விழா எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே அணையை கட்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதி பாசனம் பெறுவதற்காகவும், வெள்ள காலங்களில் நீரை பிரித்து கொள்ளிடத்தில் விடுவதற்கும் கரிகால சோழனால் கல்லணை கட்டப்பட்டது. இந்நிலையில் தை மாதம் இரண்டாம் நாள் உழவர் தினமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் கரிகாலச் சோழனுக்கு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் மூன்றாவது ஆண்டாக கரிகாலச்சோழன் சிலை, ஆர்த்தர் காட்டன் சிலை, காவிரி தாய் ஆகிய சிலைக்கு மாலை அணிவித்து, பழங்களால் படையலிட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
அப்போது, கரிகாலச் சோழன் சிலை முன்பு, தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டு, அவரது தன்மானம் காப்போம், காவிரியை மீட்போம், தன்னுரிமை காப்போம், காவிரியை காப்போம் என முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லணையை கட்டிய கரிகாலச் சோழனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை இரண்டாம் நாளான உழவர் திருநாளில், இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் மேகேதாட்டில் அணை கட்ட அனுமதி கிடைத்துவிட்டது என்று சொல்கின்றார். அப்படி அங்கு அணைகட்டினால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கூடவராது. இதை தமிழக முதல்வர் எதிர்த்து குரல் கொடுக்காதது கண்டிக்க தக்கது. ஏற்கெனவே கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி அணையைக் கட்டி நமக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து விட்டனர். கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியினர் 20 ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டு அணையை கட்ட நடைபயணம் பேரணி என செல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்கட்சி தலைவருமாகிய பழனிசாமி, சேலத்தில் மேட்டூர் அணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வெட்ட ஆணை வழங்கினார். தற்போது கர்நாடகாவில் அணையை கட்டியே தீருவோம் என கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்து ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. மேகதாட்டில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் எதிரிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் அனைத்து கட்சியினரும் ஒரு மித்த குரலோடு அணை கட்டுவதை தடுக்க வழி வகை செய்ய வேண்டும். அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கும் என்றார்.