மரபணு குறைபாட்டால் தவிக்கும் சிறுமி கௌசிகா: காஞ்சிபுரத்தில் குவியும் உதவி! பெற்றோரின் கண்ணீர் கதை
"மரபணு குறைபாட்டால் தவிக்கும் சிறுமி கௌசிகாவுக்கு சமூக அலுவலர்கள் உதவி செய்து வருகின்றனர்."

"காஞ்சிபுரம் மரபணு குறைபாட்டால் பாதிப்படைந்து, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் சிறுமிக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை சுமார் 3.5 ரூபாய் மட்டுமே உதவி கிடைத்திருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்"
உதவிக்காக காத்திருந்த சிறுமி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் குளம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சசிகலா தம்பதியினரின் ஏழு வயது மகள் கௌசிகா. கடந்த 2018-ஆம் ஆண்டு பிறந்த கௌசிகா, முதல் ஒரு வருடம் ஆரோக்கியமாகவே வளர்ந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகு அவரது உடல் வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மூக்கு, கண் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுபாடுகளால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், சிறுமி கௌசிகாவுக்கு அரிய வகை மரபணு குறைபாடு (Genetic Disorder) இருப்பது கண்டறியப்பட்டது.
சிகிச்சைக்கு தேவைப்பட்ட 60 லட்சம்
இந்த நோய்க்கான சிகிச்சையாக, வாரம் ஒருமுறை தலா ₹2 லட்சம் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு, சுமார் ₹60 லட்சம் மதிப்பிலான 30 வார கால சிகிச்சையைத் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர் மேற்கொண்டனர். இதனால் குழந்தையின் உடல்நிலை சீரடைந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நிதி உதவி கிடைக்காததால் சிகிச்சை தடைப்பட்டது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
சிகிச்சை நிறுத்தப்பட்டதால், மீண்டும் உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு, சிறுமி மூச்சு விடக் கூட சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மீண்டும் 30 வார சிகிச்சைக்கு ₹60 லட்சம் தேவைப்படும் நிலையில், வறுமையில் வாடும் பெற்றோர் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். ஆட்சியரிடம் மனுவும், பள்ளி மாணவர்களின் கேலியும் தன் மகளைக் காப்பாற்றக் கோரி, தந்தை செல்வகுமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதற்கிடையே, உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்ததால், கல்வியில் சிறந்து விளங்கிய கௌசிகா கடந்த ஒரு வாரமாகப் பள்ளிக்குச் செல்லாமல் முடங்கியிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து, பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். தற்போது வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக சுமார் ₹2.5 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.
சிறுமிக்கு தொடரும் உதவிகள்
இந்தத் துயரச் செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்த சமூக ஆர்வலரும், காஞ்சிபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான அருண்குமார், நேரில் சென்று குழந்தையின் பெற்றோரைச் சந்தித்தார். உடனடியாகத் தனது பங்களிப்பாக ₹1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். மேலும், ஒரு முக்கிய அறிவிப்பாக, "சிறுமி கௌசிகா சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும்போது, அவர் தனது பாரதிதாசன் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைப் பயிலலாம். தொடர்ந்து எனது நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக பேசி வருவதாகவும்" உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறுமைக்கு காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





















