Kanchipuram New Bus Stand: 50 ஆண்டுகள் காத்திருப்பு! காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்! 35 கோடியில் பணிகள் தொடக்கம்! அப்டேட் என்ன ?
Kanchipuram New Bus Stand latest News: "காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை, விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது"

Kanchipuram New Bus Stand Update: "காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது"
வளர்ச்சியை நோக்கி காஞ்சிபுரம் மாநகராட்சி - Kanchipuram
சென்னைக்கு புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய, வரலாற்று சிறப்புமிக்க நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை நாளுக்கு நாள், புதியதாக குடியிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோக காஞ்சிபுரம் கோயில்கள் நகரம் என்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலாவிற்காக படை எடுக்கின்றனர். மேலும், அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில், அதிகளவு வேலை வாய்ப்புகள் இருப்பதால் காஞ்சிபுரம் வழியாக, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்துபவரின், எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் - Kanchipuram Bus Stand
காஞ்சிபுரம் மாநகரத்தில் மையப்பகுதியில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேருந்து நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, கல்பாக்கம், வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை, சேத்பட், திருச்சி, திருப்பதி, அரக்கோணம், மதுரை, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல் - Kanchipuram Traffic Congestion
காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் நகருக்குள் வருவதாலும், நகரத்திலிருந்து வெளியே செல்வதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கைகள் இருந்த வண்ணம் இருக்கின்றன.
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் - Kanchipuram New Bus Stand
இதனைத் தொடர்ந்து, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதில் சிக்கல் இருந்தது. இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. 11.5 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் தொடங்கப்பட உள்ள பணிகள்
கடந்த மே மாதம் காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான "டெண்டர்" விடப்பட்டது. தொடர்ந்து அதன் அடிப்படையில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு "டெண்டர்" ஜூன் மாதம் விடப்பட்டது.
தற்போது அந்த பணி முழுமை அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில தினங்களில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் தொடங்கப்பட்டால் அடுத்த 6 மாதத்திற்குள், பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு
பொன்னேரிக்கரை அருகே பேருந்து நிலையம் அமைக்கும் நிலம் தொடர்பாக, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது, என அறக்கட்டளை நிர்வாகத்தினர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியபோது: "வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும். சாதகமான தீர்ப்பின் அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும்" என தெரிவித்தனர்.





















