Kallakurichi: இல்லவே இல்லை என மறுக்கும் அரசு! அடித்து சொல்லும் அதிமுக! கலக்கத்தில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் இன்று அடுத்தடுத்து 4 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்து தான் இறந்ததாக தகவல் பரவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனை பெருக்கெடுத்து ஓடுவதாக அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் இன்று அடுத்தடுத்து 4 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்து தான் இறந்ததாக தகவல் பரவியது. ஆனால் இத்தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார். மேலும் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே என்ன காரணம் என தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராயத்தால் தான் 4 பேர் இறந்தனர் என கூறி தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கேட்டால் சாராயம் குடித்து தான் அனுமதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் கள்ளச்சாராயம் குடித்து தான் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் தான் கோட்டைமேடு உள்ளது. அந்த இடம் வெளிப்புறத்தில் எல்லாம் இல்லை. கோட்டைமேடு காவல் நிலையத்துக்கு பின்னால் தான் உள்ளது. அங்கு தான் 4 பேர் இன்றைக்கு இறந்திருக்கிறார்கள். 48 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாரும் ரொம்ப சீரியஸாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் கடந்த 2 நாட்களாக குடித்தவர்கள். மாவட்ட ஆட்சியரும் கள்ளச்சாராயம் இல்லை என சொல்கிறார். நேரில் வந்து கள நிலவரத்தை பார்வையிடுகிறார்கள். சிகிச்சைப் பெற்று வருபவர்களே சாராயம் குடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் ஆட்சியர் அப்படி எதுவும் இல்லை என மூடி மறைப்பது ஏற்புடையது அல்ல.
சிகிச்சை பெற வந்தவர்களில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கான வசதிகளோ, காப்பாற்றக்கூடிய சூழலோ இல்லை. 4 பெண்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து விட்டது பரிதாபமாக உள்ளது. மாதவச்சேரி கிராமத்தில் நேற்று ஒரு இறப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு வந்தவர்கள் அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் வாங்கி குடித்து விட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 6 மாதத்துக்கு முன்னால் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் பிரச்சினை இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் எல்லாம் எத்தனையோ முறை இப்பிரச்சினை பற்றி பேசியிருக்கிறேன். கள்ளச்சாராய விற்பனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.