Kalaingnar Marathon: கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்; அமைச்சர் சுப்பிரமணியன் ஓட்டநாயகன் - முதலமைச்சர் ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு மாரத்தான் போட்டியானது தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., ஆகிய 4 பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெற்றது. அனைத்து பிரிவுகளும் கருணாநிதி நினைவிடம் தொடங்கி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் பேசுகையில், “செயல்படுவதில் ஒரு மாரத்தான் அமைச்சராக விளங்கி வருபவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவரை பலரும் மாரத்தான் சுப்பிரமணியன் என அழைக்கின்றனர். மக்கள் பணியில் தனக்கென தனி முத்திரை பதிப்பவர் அமைச்சர் மா. சுப்பிரமணியன். அவரது நிகழ்ச்சி ஏற்பாடுகளை யாராலும் காப்பி அடிக்க முடியாது. அவரைப் போல் என்னாலோ இங்குள்ள விளையாட்டுத்துறை அமைச்சராலோ அல்லது மற்ற அமைச்சர்களாலோ கூட ஓட முடியாது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளூரில் தொடங்கி உலகெங்கிலும் சென்று மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுபவர். ஆட்டநாயகன் கேள்வி பட்டிருப்போம், இவர் ஓட்டநாயகன்.
நான் மேயராக இருந்தபோது பெற்ற பாராட்டுகளைவிட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமான பாராட்டுகளை பெற்றவர். - கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என அனைவரும் கலந்து கொண்ட சமூகநீதி மாரத்தான். 1,063 திருநங்கையர் - திருநம்பிகள் உட்பட 73,206 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட மாரத்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. ” என முதலமைச்சர் பேசியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறது. இதில் 50 ஆயிரத்து 529 பேர் ஆண்களும், 21 ஆயிரத்து 514 பேர் பெண்களும், ஆயிரத்து 63 திருநங்கை மற்றும் திருநம்பியர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகத்திலேயே முதல் முறையாக திருநங்கைகள் மற்றும் திருநம்பியர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளீர்கள். திருநங்கை திருநம்பியர்களுக்கு திமுக இளைஞர் அணி சார்பில் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உதயநிதி கூறியுள்ளார். இந்த மாரத்தானில் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர், கடலோர காவல் படையினர், பல்வேறு நாட்டு தூதுவர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே இந்த மாரத்தான் சமூகநீதி மாரத்தானாக மாறியுள்ளது. இந்த மாரத்தான் மூலம் கிடைத்த 3 கோடியே 42 லட்சம் ரூபாய், ராயப்பேட்டை அர்சு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

