Kalaignar Magalir Urimai Scheme: நாட்டுக்கே முன்னோடி... விளிம்புநிலை மகளிருக்கு விடிவெள்ளி!- உரிமைத்தொகையால் மலரும் மகளிர் வாழ்க்கை!
Kalaignar Magalir Urimai Thogai Scheme: பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கான பல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பற்பல மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திராவிட இயக்க அரசுகள் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து போட்டி போட்டுக்கொண்டு, மாறி மாறி மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தின. இன்னும் செயல்படுத்தி வருகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
பெண் சிசுக்கொலை தடுப்பு
பெண் கல்வி, பெண் குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்துதல், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் சிறிய குடும்பக் கொள்கை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் உள்ள ஏழைக் குடும்பத்தினர் இந்தத் திட்டத்துக்கத் தகுதியானவர்கள் ஆவர். இந்தத் திட்டத்தின் மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது.
பெண்களின் திருமணத்துக்கு உதவித் தொகை திட்டங்கள், கலப்பு திருமணம், மறு மணத்துக்கு நிதி உதவி, கைம்பெண் மறுமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பெண்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகத் தொடங்க அரசு உதவி வருகிறது.
குறிப்பாக முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்), டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம் (Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Assistance Scheme), பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை திருமண உதவித் திட்டம் (E.V.R.Maniammaiyar Ninaivu Marriage Assistance Scheme for Daughter’s of Poor Widows), அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் (Annai Teresa Ninaivu Marriage Assistance Scheme for Orphan girls), டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் (Dr.Muthulakshmi Reddy Ninaivu Inter-caste Marriage Assistance Scheme), சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் (Sathiyavanimuthu Ammaiyar Ninaivu Free Supply of Sewing Machine Scheme), அரசு சேவை இல்லங்கள் (Government Service Home), பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் (Government Working Women's Hostel) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இவை தவிர கர்ப்பிணிகளுக்கு சத்து மாவு உள்ளிட்ட நலப் பெட்டகம், மகப்பேறு உதவித் தொகை, உழைக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுமுறையுடன் கூடிய ஊதியம், தொட்டில் குழந்தை திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம் ஆகியவற்றையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதிகாரம் சார் உரிமை
பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். குறிப்பாக, நாட்டிலேயே முதல்முறையாக, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பதை செயல்படுத்திக் காட்டினார். உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உருவாக்கினார்.
அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீட்டையும் மகளிருக்கு வழங்கி, அதிகாரத்தில் பெண்கள் கால் பதிக்கத் தடம் அளித்தார். மகளிர் பிறரைச் சார்ந்து மட்டுமே வாழாமல் சொந்தக் காலில் நிற்க, மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார். இதன்மூலம் கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் மேம்பட்டது. 1973இல் இந்தியாவிலேயே முதன்முறையாகக் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்தார் கருணாநிதி. மகளிருக்கென பிரத்யேகக் காவல் நிலையங்களும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டன.
தந்தை வழியில் தனயன்
தந்தை வழியில் தனயனும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாலிக்குத் தங்கம் திட்டத்தை புதுமைப் பெண் திட்டமாக மாற்றினார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவித் திட்டம் என்ற பெயரில் செயல்படும் இந்தத் திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோல மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் (Free Bus Scheme)
பெண்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்ட, அதிகம் வரவேற்பைப் பெற்ற திட்டங்களில் முக்கியமானது கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம். உழைக்கும் ஏழை மகளிருக்கு இந்தத் திட்டம் அதிக பலனை அளித்து வருகிறது. ஒரு பெண் பயணி மாதத்தில் சராசரியாக 50 முறை பயணித்து, ரூ.858 சேமிக்கிறார்.
மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவது, குழந்தைகளின் தேவை உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் சேமிப்பைப் பயன்படுத்துவதாக பெரும்பாலான பெண் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரிமைத்தொகை திட்டம்
இதற்கிடையே மாதாமாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 15) அறிமுகம் செய்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கப் போகும் இந்தத் திட்டம், ஏழை மகளிரின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சுவதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பெண்கள் பிறக்கும்போதும் பிறகு படிக்கவும் பணிக்குச் செல்லும்போதும் திருமணத்துக்கும் மகப்பேறுக்கும்தான் அரசு உதவிகளைச் செய்து வருகிறது. இல்லத்தரசிகளுக்கும் விளிம்புநிலைப் பெண்களுக்கும் பெரிதாய் எந்தத் திட்டமும் இல்லாத நிலைதான் நிலவியது.
மலரும் மகளிரின் வாழ்க்கை
திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தைகள் என வீட்டிலேயே தங்களின் எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளும் பெண்களுக்கும் தினசரி உழைத்தால்தான் உணவு என்று வாழும் விளிம்புநிலை மகளிருக்கும் இந்த உதவித்தொகை... அல்ல அல்ல அவர்களின் உரிமைத் தொகை நிச்சயம் பேருதவியாக இருக்கும். முதலமைச்சரின் முயற்சியால் வழங்கப்படும் உரிமைத்தொகை மூலம் மகளிரின் வாழ்க்கை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.