Kaanum Pongal 2024: காணும் பொங்கல் கொண்டாட்டம்! வரலாறு என்ன? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் 16,500 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள்.
காணும் பொங்கல் வரலாறு:
குறிப்பாக காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து விதவிதமான உணவுகள் மற்றும் பலகாரங்கங்களை எடுத்து ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று பொழுதை உற்சாகமாக கழிப்பர். நீர் நிலைகளை சென்று காண்பது காணும் பொங்கல் என்றும், உறவுகளை சென்று காண்பதை காணும் பொங்கல் என்றும் கூறப்படுகிறது. காண் என்றால் காணுதல் என்று பொருள்படும்.
ஆனால் உண்மையில் காணும் பொங்கல் என்றால் என்ன என்பதற்கு வரலாறு உண்டு. இன்றளவும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்று கொண்டாடுவார்கள். இந்த கன்னிப் பொங்கலன்று திருமணமாகாத கன்னி பெண்கள் அனைவரும் ஒன்று கூடி, அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களை வைத்து பொங்கல் வைத்து பகிர்ந்து உண்ணுவது காணும் பொங்கல் ஆகும். மேலும், வீட்டில் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என வேண்டி வீட்டில் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைத்து வழிப்படுவார்கள்.
காலை 9 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டும், தடைகள் விலக வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம். பொங்கல் படைத்து வழிபட்ட பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றால் கூடுதல் சிறப்பு.
சென்னையில் காணும் பொங்கல்:
இது காணும் பொங்கலின் ஒரு பகுதி மட்டுமே, காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்வார்கள். முக்கியமாக தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா என பல்வேறு சுற்றுலா இடங்களில் வருகை தருவார்கள்.
சென்னையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதும் என்பதால் மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15, 000 காவல்துறையினர் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் என மொத்தம் 16,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளில் மக்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டவர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் பெற்றோர்களோடு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.