அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது ஏன்..? உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான கருத்து!
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த வழக்கை தானாக முன் வந்து மறு விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை ஏன் தாமாக முன்வந்து எடுத்தேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதி அளித்த விளக்கத்தில், “அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது ஏன் என்பது குறித்து 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளேன்” என்றார்.
சூமோட்டோ வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, சூமோட்டோ வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விவரம்:
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்தார். 1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
இந்த சூழலில் அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்தது. அதில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு 124-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது எந்த காரணத்திற்காக வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க எடுத்தது என லஞ்ச ஒழிப்புத்றை தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கி கூறினார்.