Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு...!
ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பர் உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கு மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு
ஜல்லிக்கட்டை தொடர்ந்து அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி, (23.11.2022) அன்று தாக்கல் செய்தது. அந்த எழுத்துப்பூரவமான வாதத்தில், ''பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. எனவே போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
ஜல்லிக்கட்டை பார்க்க நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு:
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை வைத்த தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை. காலம் காலமாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயதுக்குள் இருக்கும் நாட்டுமாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது.' என வாதத்தையும் எடுத்து வைத்தது.
எழுத்துப் பூர்வமாக..
தமிழ்நாடு அரசின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்குவதாக பலர் காளை மீது பாய்கிறார்களே?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'பலர் காளையை அடுக்குவதாக காளை மீது பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அந்த காளையை விட்டு விடுவார்கள். போட்டி நடக்கும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் அந்த காளையின் மீது பாய்ந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இது இந்த போட்டியில் காலம் காலமாக உள்ள எழுதப்படாத விதி. மேலும் இந்த விதி போட்டியின்போது மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது' என தமிழ்நாடு அரசு தனது பதிலை தெரிவித்தது.
இந்த வாதத்தினை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், போட்டியின் போது 'ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பார்கள் என எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் கருத்து' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.