Kalaignar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..
நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்புகள் உனக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தில அவற்றைக் குற்றிப்பிட்டுள்ளேன் - கலைஞர் கருணாநிதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே.சந்துரு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தனது சட்ட அனுபவங்களை அவ்வப்போது கட்டுரைகளாகத் தீட்டி வருகிறார். அவர் பதவியில் இருந்தபோது வழங்கிய சில முக்கிய தீர்ப்புகளைத் தொகுத்து, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" என்ற சிறப்பான தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள்தான் இன்றைய உடன்பிறப்பு மடல். நான் படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை நீயும் அடைய வேண்டு மல்லவா?
இந்த நூலில் 15 தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. அந்தத் தலைப்புகளைப் பார்த்தாலே நீதிபதி சந்துரு அவர்கள் யார் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும்! இதோ சில தலைப்புகள்!
1. இட ஒதுக்கீடு
2. சாதி மறுப்புத் திருமணங்கள்.
3. தீண்டாமைச் சுவர் தகர்ந்தது.
4. பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தலித் சிறுமிகள்
5. தலித்துகளின் வாழ்வுரிமை
6. பஞ்சமி நிலம்
7. மத மாற்றம்
8. நூலகத்திற்கு வந்த கேடு
9. கோவில்களில் வழிபாட்டுரிமை
இட ஒதுக்கீடு என்ற தலைப்பின் கீழ்தான் வழங்கிய ஒருசில தீர்ப்புகளை நீதிபதி சந்துரு அவர்கள் இந்த நூலில் இடம் பெறச் செய்திருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் ஒரு பள்ளியுடன் இணைந்த சத்துணவுக் கூடத்திற்கு ஆறுமுகத் தாய் என்ற பெண்ணை சமையல் உதவியாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்திருக்கிறார். அப்பெண் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் பள்ளியின் தாளாளர், தன்னைக் கலந்துகொள்ளாமல் நியமித்த நபரை பணியில் சேர்க்க முடியாது என்று கூற, அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை பணியில் சேர்க்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பள்ளியை மூடிவிடுவேன் என்றும் தெரிவிக்க, பள்ளி தாளாளர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கினை நீதிபதி சந்துரு விசாரித்து, அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து, பள்ளித் தாளாளரை உடனடியாக அப்பெண்மணியை வேலையில் அனுமதிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
சத்துணவு மையத்திற்கு பணியாளர் அமர்த்தும் போது, சத்துணவு மைய வேலையைக் கோருவோர் மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டுமென்று விதி இருந்ததால், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த பெண்கள் ஊருக்கு வெளியே காலனியில் வசித்த காரணத்தால், பணிகள் கிடைப்பதில்லை என்று வசந்தா என்ற ஒரு பெண் வழக்கு தொடுத்த போது, நீதிபதி சந்துரு அதனை விசாரித்து, சத்துணவு மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனை அரசமைப்பு சட்டத்திற்கு முரண்பட்டது என்றும், தகுதித் தேர்வில் இருவர் சமமாக மதிப்பெண் பெற்றால், தேர்வுக் குழுவினர் மையங்களுக்கு அருகிலே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்.
சத்துணவு மையங்களுக்கு உள்ள பணிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போத்துமல்லி என்ற பெண் ஒரு வழக்கு தொடுத்தார். அதன்மீது தீர்ப்பு கூறிய சந்துரு சத்துணவு மையங்களில் உள்ள பதவிகள் நிரப்பப்படும்போது, கட்டாயமாக இட ஒதுக்கீடு சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைப் பற்றி இந்நூலில் தனது தீர்ப்புகளை விவரித்துள்ள சந்துரு, என்னைப் பற்றியும் அதிலே எழுதும்போது, "அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி உடனே இத்தீர்ப்பை அமுல்படுத்தி 6-7-2010 அன்று அரசாணை எண். 142, சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டார். அவ்வுத்தரவின் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் தலித் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் சத்துணவு பணிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது" என்றும் மனம் திறந்து குறிப்பிட்டிருக்கிறார்.
பதினைந்து தலைப்புகளில் நீதிபதி சந்துரு , தான் வெளியிட்ட தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி எழுதியிருப்பதோடு, ஒவ்வொரு தீர்ப்புக்கும், அம்பேத்கர் சொன்ன தத்துவங்களை இணைத்து இந்த நூலின் தலைப்பான "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்"" என்பதை நிலைநாட்டியிருக்கிறார். அம்பேத்கர் சொல்லியிருக்கின்ற அந்தக் கருத்துகள் தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் கருத்துகளோடு ஒத்த கருத்துகள் என்பதையும் அந்த கருத்துகளின் அடிப்படையில்தான் நீதிபதி சந்துரு அவர்கள் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பதையும் இந்த நூலைப் படித்த போது நான் புரிந்து கொண்டேன்.
"சாதி மறுப்புத் திருமணங்கள்" என்பது ஒரு கட்டுரைக்கான தலைப்பு. சாதி மறுப்புத் திருமணங் களுக்கெதிராக சமூகத்தில் நடைபெற்று வரும் கொடுமைகளை பற்றி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து ஒன்று அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. அந்தக் கருத்து :-
"மனுதாரர் வயது வந்தவர் என்பதிலும், சம்பந்தப்பட்ட காலத்தில் அவர் வயது வந்தவரே என்பதிலும் எவ்வித விவாதமும் இல்லை. எனவே, தான் விரும்பிய எவரையேனும் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது விரும்பியவருடன் வாழ்வதற்கோ அவளுக்கு சுதந்திரம் உண்டு. இந்துத் திருமணச் சட்டப்படியோ அல்லது வேறு எ.ந்தச் சட்டப்படியோ சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ள தடை ஏதுமில்லை. குற்றம் சாட்டப் பட்டவர்கள் (சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஜோடி) எந்தக் குற்றமும் செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. தங்களின் சகோதரி சாதி விட்டுத் திருமணம் செய்து கொண்டாள் என்று கோபம் அடைந்ததால்; தூண்டுதலின் பேரில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு முற்றிலும் நீதிமன்ற நடைமுறையையும், நிர்வாக இயந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதாகும். வழக்கு தொடுத்த அந்தச் சகோதரர்களின் சட்டவிரோத மற்றும் அடக்குமுறையான செயல்களுக்கு எதிராக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பெண்ணின் கணவர் மற்றும் அவரின் உறவினர்களின் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருப்பது எங்களுக்குப் பெரும் வேதனை அளிக்கிறது. தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்து கொள்ளும் இளம் ஆண்கள், பெண்களுக்கு எதிராக தொல்லைகள், பயமுறுத்தல்கள், வன்முறை போன்ற பல சம்பவங்கள் நடப்பது எங்கள் கவனத்திற்கு வந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து பொதுவான கருத்துகளை கூறுகிறோம். சரித்திரத்தில் சிக்கலான கால கட்டத்தை நாடு கடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் இவ்வழக்கு போன்று பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீதிமன்றம் வாளாயிருக்க முடியாது. சாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக்கேடாகும். இதனை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் அழிப்பது நல்லது. சாதிக் கலப்புத் திருமணம் என்பது சாதி முறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால் அவை நாட்டு நலனுக்கு ஆனவையாகும். இது ஒரு சுதந்திர ஜனநாயக நாடு. ஒருவர் வயது வந்த நிலை அடைந்ததும், அவனோ அவளோ தாம் விரும்பும் எவரையும் மணம் செய்து கொள்ளலாம். சாதிக் கலப்புத் திருமணம் அல்லது மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவரை பயமுறுத்துவதோ, வன்முறை விளைவிப்பதோ, அல்லது வன்முறை விளைவிக்கத் தூண்டுவதோ, இன்னல்கள் தருவதோ கூடாது.
சாதிக் கலப்பு, மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடியை யாரும் துன்புறுத்தவோ, பயமுறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்படாமலோ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள நிர்வாகத்திற்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறோம். பயமுறுத்தல், துன்புறுத்தல், வன்முறை விளைவித்தல் போன்ற செயல்களில் எவரேனும் தாமாக ஈடுபட்டாலும், அல்லது தூண்டு தலின் பேரில் நிகழ்த்தப்பட்டாலும், அத்தகையோர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து மேலும் சட்டத்தில் உள்ள வழிவகைப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறோம்."
உச்ச நீதிமன்றம் இவ்வாறு கடுமையாகத் தெரிவித்துள்ள கருத்தை நீதிபதி சந்துரு இந்த நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். இந்தக் கருத்தினை அவர் மேற்கோள் காட்டியிருப்பது அவர் வழங்கிய ஒரு தீர்ப்பினையொட்டித்தான். சாதி மறுப்புத் திருமணத்திற்கு உதவப்போனவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, அது நிலுவையில் இருந்ததனால், காவல் துறையில் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது.
சிவனேசன் என்பவரின் நண்பர் சுதாகர். சுதாகருக்கும், அவருடன் படித்த அறச் செல்வி என்பவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் நடந்தது. காதல் திருமணம். திருமணத்தைப் பதிவு செய்ய சாட்சியாகப் போனவர் சிவனேசன். அறச் செல்வியின் அண்ணியார் உள்ளூர் காவல்துறை உதவி ஆய்வாளர். அவரது முயற்சியால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதாகரும், சிவனேசனும் சிறையிலே அடைக்கப்பட்டனர். சிவனேசன் வழக்கு நிலுவையிலே இருக்கும்போது, இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குற்றப் பின்னணியை விசாரித்து அனுப்பிய அறிக்கையில், இவ்வழக்கு நிலுவையில் இருப்பதைப் பற்றிக் கூறப்பட்டிருந்ததால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. அதை எதிர்த்துத்தான் சிவனேசன் ரிட் மனு தாக்கல் செய்தபோது, அந்த வழக்கு நீதிபதி சந்துருவிடம் வந்ததால், சாதி மறுப்புத் திருமணத்தைப் பற்றி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி, சிவனேசனுக்கு வேலை அளிக்க மறுத்தது தவறு என்று தீர்ப்பு அளித்ததை அந்தக் கட்டுரையில் நீதிபதி சந்துரு எடுத்துக்காட்டி யிருக்கிறார்.
சாதி மறுப்புத் திருமணங்கள் பற்றி தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எடுத்துக் கூறி வரும் கருத்துகளுடன் ஒத்துப் போகும் ஒரு கருத்து இது என்பதால், இந்தக் கட்டுரை என்னைக் கவர்ந்தது.
"வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,தான் அளித்த இரண்டு மூன்று தீர்ப்புகளை நீதிபதி சந்துரு இந்த நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்திலுள்ள வாச்சாத்தி என்ற ஆதிவாசி கிராமத்தில், 1995ஆம் ஆண்டு நுழைந்த காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அங்கிருந்த ஆதிவாசி மக்களை மிகக் கொடூரமாகத் தாக்கினர். பல பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி பானுமதி தலைமையிலான விசாரணைக் கமிஷன், அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகளும், துறை ரீதியான விசாரணையும் நடத்த பரிந்துரை செய்தது.
வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. குற்றவியல் வழக்கு முடிவதற்கு முன்னால் தங்கள் மீது துறை விசாரணை நடத்தக்கூடாது என்று 12 காவலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில், “Considering that the petitioners were charged for grave offences such as raping tribal women, the question of stalling the departmental action cannot indefinitely be postponed. In the light of the above factual matrix and the legal precedents cited above, this writ petiton stands dismissed”" என்று தெரிவித்ததையும் இந்த நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இதுபோலவே 22-11-2011 அன்று இரவு திருக்கோவிலூர் தாலுக்காவில், மணம்பூண்டி புறவழிச்சாலையில் நான்கு தலித் பெண்கள் தங்களது வேலையை முடித்துச் செல்கையில், அங்கு ரோந்துக்கு வந்திருந்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர், சிறப்பு துணை ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து அவர்களைப் பலவந்தப்படுத்தி வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சரக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்களைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்தார். அவர்கள் தங்களுடைய தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய உயர் நீதி மன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்த போது நீதிபதி சந்துரு அவர்கள், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பையும் இந்த நூலிலே எடுத்துக் காட்டியிருக்கிறார்.
மேலும் நீதிபதி சந்துரு வழங்கிய பல தீர்ப்புகளை, குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளிலே அவர் அளித்த தீர்ப்புகளை உள்ளடக்கி இந்த நூல் அமைந்திருப்பதை நான் முழுவதும் படித்ததோடு, அந்தக் கருத்துகள் உனக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகவே இந்தக் கடிதத்தில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளேனே தவிர வேறு எந்த உள்நோக்கமும் அல்ல. இத்தகைய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி சந்துரு அவர்கள் தி.மு. கழக அரசையும், ஏன் என்னையும்கூட விமர்சனம் செய்தவர் என்றுகூடச் சொல்வார்கள். இருந்தபோதிலும் இந்த நூலில் அவர் எழுதிய தீர்ப்புகளைப் பாராட்டுகின்ற வகையில்தான் இதனை எழுதினேன்.