Migjam Cyclone: சென்னைக்கு டாட்டா சொல்லும் புயல்.. பயணிக்கப்போகும் பாதை இதுதான்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் வரும் 5 ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் மிக்ஜாம் புயல் தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாறுமா என்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது புயலாகவே கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
முதலில் இந்த புயல் வடக்கு நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது வங்கதேசம் நோக்கி செல்லும் என பல்வேறு மாதிரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புற காரணிகளால் அதாவது கடலில் இருக்கும் பிற பகுதிகளில் இருக்கும் அழுத்தம் போன்ற புற காரணிகளால் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 5 ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதலில் நேற்று இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது புயலின் திசை சற்று மாறி அந்திராவை நோக்கி நகர்கிறது. சென்னைக்கு அருகில் கரையை கடக்க இருந்த நிலையில் நாளை உருவாகும் புயல் சென்னையில் இருந்து விலகி செல்கிறது. டிசம்பர் 4 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வந்து செல்கிறது. இதனால் கனமழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. 5 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் 6 ஆம் தேதி விஷாகப்பட்டினத்திற்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
நாளை உருவாகும் புயலில் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள்:
02.12.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
02.12.2023 காலை வரை வீசக்கூடும். மேலும், காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் 03.12.2023 காலை முதல் வீசக்கூடும். 03.12.2023 மாலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் & தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்:
02.12.2023 மாலை முதல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு 03.12.2023 காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 03.12.2023 மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 04.12.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள்:
04.12.2023 மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 05.12.2023 மாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.