இவர்களால்தான் போலீஸ் சுதந்திரமா செயல்பட முடியவில்லை - முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் காவல்துறையை செயல்படவிடாமல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட சொல்வதால் போலீஸார் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
புதுச்சேரி: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையீடு அதிகமாக இருப்பதால் போலீஸார் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மக்கள், எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, இதே நிலை நாளை எம்பி, அமைச்சர்களுக்கும் ஏற்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியளர் சந்திப்பில் கூறுகையில், சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் அலுவலகத்திற்கு வந்து அவருக்கு ரவுடி ராமு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வியாபாரிகள் புகார் தந்ததால் உழவர்கரை ஆணையரிடம் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தியது தான் ரவுடி மிரட்டலுக்கு காரணம்.
ரவுடி ராமு மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது
ரவுடி ராமு மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் பத்து கொலை வழக்குகள். ரவுடி ராமு முதல்வர் தொகுதியைச் சேர்ந்தவர். 21 வழக்குகள் உள்ள ரவுடி ராமு வெளியில் நடமாடுகிறார். பத்து வழக்குகளுக்கு ஜாமீனே அவர் எடுக்கவில்லை. போலீஸை கட்டிப்போட்டது யார்?.
முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் காவல்துறையை செயல்படவிடாமல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட சொல்வதால் போலீஸார் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். முதல்வர், அமைச்சர்கள் தலையீடு உள்ளதால் போலீஸார் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் புகார்கள், வீடு அபகரிப்பு, சொத்து அபகரிப்பு, செயின் பறிப்பு, வழிபறி தொடர்ந்து நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி வரும் போது தொடர்ந்து இதுபோல் நடக்கும். காங்கிரஸ்- திமுக கூட்டணியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தோம். ரவுடிகளை சிறையில் தள்ளினோம்.
போலீஸார் சுதந்திரமாக செயல்படாமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது. சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களை மிரட்டுகின்றனர். மக்கள், எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நாளை எம்பி, அமைச்சர்களுக்கும் ஏற்படும். இந்த ஆட்சியால் பயன் என்ன ? முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
முன்னதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் (நாடாளுமன்ற உறுப்பினர்) வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டம் ஒழுங்கு புதுச்சேரியில் இல்லை. இதுகுறித்து முதல்வர் கவலைப்படுவதும் இல்லை. முதல்வர், அமைச்சர்களை பாதுகாக்க தான் போலீஸார் உள்ளனர் என குற்றம் சாடினர்.
ரங்கசாமி அறிவிப்பு முதல்வர்தான்
மக்களுக்காக அல்ல. போக்குவரத்தை மக்களுக்கு சீரமைக்காமல் முதல்வர், அமைச்சர்கள் வந்தால்தான் சீரமைப்பில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வியாபாரிகளுக்கும், பெண்களுக்கும் எங்கு பாதுகாப்பு தருகிறார்கள். தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை தரவில்லை. தீபாவளி உதவித்தொகை தரவில்லை. ரங்கசாமி அறிவிப்பு முதல்வர்தான். இதுதவிர அவருக்கு ஏதும் தெரியாது என்றார்.
ரவுடி ராமு கைது
புதுச்சேரி, உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர். இவர், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மனாகவும் உள்ளார். ஜிப்மர் எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சி வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
சிவசங்கர் எம்.எல்.ஏ., ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு, சிவசங்கர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட கூடாது என மிரட்டல் விடுத்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டுமொத்த வியாபாரிகள் சங்கத்தினரும் பேரணியாக சென்று கவர்னர், முதல்வரிடம் மனு அளித்தனர்.
நேற்று முன்தினம் சரணடைந்து, ஜாமின் பெற ரவுடி ராமு புதுச்சேரி நீதிமன்றம் வந்தார். எம்.எல்.ஏ.,வை மிரட்டிய வழக்கு என்பதால், ஜாமின் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் இருந்து ராமு எஸ்கேப் ஆனார். இந்நிலையில் நேற்று ரவுடி ராமுவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.