ரேஷன் அட்டைதாரர்களே ஹாப்பி நியூஸ்.. சென்னையில் நாளை நடைபெறும் குறைதீர் முகாம்.. விவரங்கள் இதோ..
நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நியாய விலைக்கடையில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பல கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்கள் எந்த தடையும் இல்லாமல் பொருட்களை வாங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் "பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.