MullaPeriyar Dam: தனது சொத்துக்களை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினாரா பென்னி குவிக்?
லண்டனில் தனது சொத்துக்களை விற்றே முல்லை பெரியாறு அணையை பென்னிகுயில் கட்டியதாக கூறப்படும் நிலையில், அணைக்கான ஷெட்டர்களை வாங்கவே அவர் லண்டன் சென்றதாக பொறியாளர் கண்ணன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக் குறித்து தவறான தகவல்கள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி புத்தகத்திலும், விக்கிப்பீடியாவின் தமிழ் மொழிப்பெயர்ப்பிலும் இடம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்தில் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு அணையை ஜான் பென்னி குவிக் கட்டியதாக தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் மற்றும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பில் இடம்பெறுள்ள நிலையில் இந்த தகவல் தவறானது என பதிப்பாளரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அலுவல்சாரா கல்விக்குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்திரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் பெரியாறு நதியானது மேற்குநோக்கு பாய்ந்து அரபிக்கடலில் கலந்து வந்தது. இவ்வாற்றின் நீரை கிழக்கு திசையில் திருப்பி வைகை ஆற்றுடன் இணைப்பதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கு உதவும் என்பது ஆங்கிலேயர்களின் திட்டமாக இருந்தது. இதன்படி முல்லைப்பெரியாறு அணையை கட்டுவதற்காக 1886ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய அரசுக்குமிடையே 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1887ஆம் ஆண்டு செப்டம்பரில் முல்லை பெரியாறு அணை கட்டும் பணியானது ஆங்கிலேய ராணுவ பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் தொடங்கியது.
காட்டுப்பகுதிக்குள் விஷப்பூச்சிகள் தொல்லை, காட்டு விலங்குகள், மழை ஆகிய சிரமங்களை கடந்து தொடர்ந்த நிலையில் இரண்டு முறை வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக கட்டப்பட்டு வந்த அணை அடிக்கடி சேதமடைந்தது. எனவே இத்திட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசு நிதி ஒதுக்க மறுத்த நிலையில் லண்டனுக்கு சென்ற பொறியாளர் ஜான் பென்னி குவிக், அங்குள்ள தனது சொத்துக்களை விற்று இந்தியாவிற்கு கொண்டு வந்து முல்லை பெரியாறு அணையை கட்டியதாக தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பிலும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக முல்லை பெரியாறு அணையில் பொறியாளராக பணியாற்றிய கண்ணன் ராஜேந்திரன் இந்த தகவல் தவறானது என விளக்கம் அளித்துள்ளார். ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசியபோது,
ஜான் பென்னி குவிக் இங்கிலாந்தில் பிறந்ததாக கூறப்படும் செய்தி தவறானது எனவும், 1841ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி புனேவில்தான் பென்னி குவிக் பிறந்ததாகவும் கூறிவுள்ளார். பிரிட்டிஷ் ராணுவத்தில் பொறியாளராக இருந்த பென்னி குவிக்கின் தந்தை 1851ஆம் ஆண்டில் பஞ்சாப்பில் நடந்த போரில் உயிரிழந்ததால் பென்னிகுவிக்கின் குடும்பம் லண்டனுக்கு சென்றது. அங்கு தனது பொறியியல் படிப்பை முடித்த பென்னி குவிக் 1860ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு ராணுவ பொறியாளராக திரும்பினார்.
1895இல் மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பின் செயலாளராகவும் 1896ஆம் ஆண்டில் மெட்ராஸ் லெஜிஸ்டிவ் கவுன்சிலில் உறுப்பினராகவும் பென்னிகுவிக் இருந்தார். அதே ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டுமானம் முடிந்ததால் லண்டனுக்கு திரும்பிய பென்னிகுவிக், 1911ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதற்கிடையே முல்லை பெரியாறு அணைக்கான ஷட்டர் உள்ளிட்ட பொருட்களை உருவாக்கி கொண்டு வரவே ஜான் பென்னி குவிக் லண்டன் சென்றாரே தவிர தன் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக பென்னி குவிக் லண்டன் செல்லவில்லை என கண்ணன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணைக்கட்டுமானம் குறித்து டெல்லி ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களில் ஜான் பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்றே அணையை கட்டியதற்கான சான்றுகள் ஏதும் ஆவணங்களில் இல்லை என கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் ஜேம்ஸ் வில்சன் ட்வீட் செய்துள்ளதை மேற்கோள் காட்டி பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டிருக்கும் பதிப்பாளரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அலுவல்சாரா கல்விக்குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்திரி, வரலாறு ஒரு விசித்திரமான மிருகம் என பதிவிட்டுள்ளார்.
This is what actually happened, Lt. Colonel Pennycuick was deputed by his Government to proceed to England to select the machinery for building Mullaperiyar dam. His trip to England pave way to a myth that John Pennycuick sold his property and start building #Mullaperiyar dam pic.twitter.com/8KfR33AtSJ
— James Wilson (@jamewils) October 10, 2020
முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக் தனது சொத்துக்களை விற்றார் என கூறப்படும் தகவல்களுக்கு அவரது பேரனும் மறுப்பு தெரிவித்துள்ளதாக பத்ரி சேஷாத்திரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில் இது குறித்த முறையான தகவல்களை சரிபார்த்து பாடநூலில் பதிவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது