Vengaivayal: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு விசாரணை; டி.என்.ஏ பரிசோதனை செய்ய 8 பேர் மறுப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயக் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயக் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளைக் கண்டறியும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8பேர் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக, புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்தது.
8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், 8 பேரும் கடந்த 7 மாதத்திற்கு முன்னர் எங்கள் பகுதி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களை குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் இந்த வழக்கு சென்றுகொண்டிருக்கிறது என கூறியுள்ளனர். அதாவது, மனித கழிவை குடிநீர் தொட்டியில் கலந்தது யார் என்பதைக் கண்டறியாமல், கலக்கப்பட்ட மனித கழிவு யாருடையது என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது எனக் கூறினர்.
ஏன் டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என சிபிசிஐடியிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றத்துக்கு, சிபிசிஐடி தரப்பில், “நாங்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிய அறிவியல் முறையை பயன்படுத்தவுள்ளோம் அதனால் தான் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம் என கூறியுள்ளனர்.
மேலும், சிபிசிஐடி டி.எஸ்.பி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் என இரு தரப்பிலும், தற்போது அடையாளம் காட்டப்பட்டுள்ள 8 பேர் மட்டும் இல்லாமல், அந்த பகுதியில் உள்ள 119க்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து, 8 பேரிடம் விசாராணை நடத்திய நீதிமன்றம், வரும் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.