உலக மகளிர் தினம்; கரூரில் பாஜக மகளிரணி சார்பில் மினி மாரத்தான் போட்டி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் மினி மாரத்தான் போட்டி திண்ணப்பா திரையரங்கம் அருகில் தொடங்கப்படும் என காவல் நிலையத்தில் அனுமதி பெறப்பட்டது.
கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியின் நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் நல்லாட்சியை விளக்கிக் கூறும் வகையில், கரூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் மினி மாரத்தான் போட்டி திண்ணப்பா திரையரங்கம் அருகில் தொடங்கப்படும் என காவல் நிலையத்தில் அனுமதி பெறப்பட்டது. காலை 9 மணி ஆகியும் தொடங்கப்படாததால் காலை 7 மணி முதல் காத்திருந்த காவல் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கும்படி அறிவுறுத்தினர்.
தனியார் மகளிர் கல்லூரி மாணவிகளை அழைத்து வந்து அவர்களை உடை மாற்ற அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்குள் அனுமதிக்கும்படி போலீசாரிடம் பாஜக நிர்வாகிகள் அனுமதி கேட்டனர். அங்கு மகளிர் தின விழா போலீசார் சார்பில் நடைபெற இருப்பதால் அனுமதிக்க முடியாது என தெரிவித்து, மாணவிகள் அனைவருக்கும் டி-சர்ட் வழங்கப்பட்டதை உடை மாற்ற உள்ளே அனுமதிக்காமல் ஆவேசமாக பேசி விரட்டி அடித்தனர்.
மேலும், போட்டி ஆரம்பிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கால தாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி கல்லூரி மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களை திறந்த வெளியிலேயே அணியும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாரத்தான் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் செந்தில் நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்ணப்பா கார்னர், செங்குந்தபுரம், காமராஜபுரம், மகாத்மா காந்தி சாலை, சேலம் பை - பாஸ் சாலை வழியாக வந்து தனியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியிம் பாஜக மாநில மகளிரணி துணை தலைவர் மீனா உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.