முந்துங்கள்...! ஓசூரில் அமைகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை.. 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு
இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ஓசூரில் அமைய உள்ளதாக, மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு பிறகு உலக அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதது மற்றும் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, பல நாடுகளை விட்டு முன்னணி நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. அதேநேம் இந்தியாவில் நிலவும் பல சாதகமான சூழல் காரணமாக, தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக அரசு அமைந்தபிறகு புதிய தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதனால், பல்வேறு புதிய தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கியும் படையெடுக்க தொடங்கியுள்ளன.
இதனிடையே, பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பதற்றமான அரசியல் சூழல் காரணமாக, சீனாவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் அந்நாட்டிற்கு வெளியே தங்களது செயல்பாட்டினை தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், ஆப்பிள் ஐபோன் உற்பத்தி பெரும்பாலும் சீனாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே அமைந்துள்ள ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆலைகளில், ஐ-போன் 14 சீரிஸ் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேபோன்று பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் எனும் மற்றொரு ஆலையிலும் ஐ-போன் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (courtesy:The economic times)
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் அமைய உள்ளதாக, மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் வேலை செய்யும் வகையில் பிரமாண்டமாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி பணியினை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐ-போனுக்கான உதிரிபாகங்களை இந்திய நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்வது இதுவே முதல் முறையாகும். இதில் பணியாற்றுவதற்காக ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த, பழங்குடியின பெண்கள் 6000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்ற, தமிழக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சமீபத்திய ஐ-போன் மாடல்கள் எதுவும், தேங்கி நிற்காமல் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. உள்நாட்டில் இருந்து ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்படாவிட்டாலும், இங்குள்ள தேவையை பூர்த்தி செய்யவே உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதில் ஓசூரில் அமைய உள்ள தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் உற்பத்தியின் தலைநகரமாக தமிழகம் மாற வாய்ப்பு உள்ளதாகவும், வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து ஐ-போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.