காலையிலே ஹேப்பி நியூஸ்! 2025 ஜனவரிக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. முதல்வர் ஸ்டாலின்
சுதந்திர போராட்ட தியாகிகள் எந்த நோக்கத்திற்காக போராடினார்களோ அந்த நோக்கத்திற்காக எந்நாளும் உழைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் பேசியுள்ளார்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டி காணப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றுவது மரபு ஆகும்.
தியாகிகளின் நோக்கத்திற்காக உழைப்போம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரையில் பேசியதாவது, “ நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். விடுதலையை பாடுபட்டு பெற்றுத்தந்த தியாகிகளை போற்றுவோம். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம். எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்களோ அதற்காக எந்நாளும் உழைப்போம் என்று உறுதியேற்போம்.
இந்த விடுதலை எளிதாக கிடைத்த விடுதலை அல்ல. 300 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது. ரத்தத்ததையே வியர்வையாக தந்து தங்கள் உடலையே விடுதலை களத்திற்கு உணவாக தந்து எண்ணற்ற தியாகிகள் நம் இந்திய மண்ணில் உண்டு. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு.
75 ஆயிரம் பணியிடங்கள்:
மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ண கொடி. எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் செயல்படும் இயக்கம்தான் தி.மு.க.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். நேதாஜியின் இ்ந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்கள்தான் தமிழர்கள். 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்”
இவ்வாறு அவர் பேசினார்.