ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சி பொருளாளர், அவரது அண்ணன் கொலை: உறவினரை தேடும் போலீஸ்! காரணம் என்ன?
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொருளாளர் கார்த்தி மற்றும் அவரது அண்ணன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளியை காவல்துறை தேடி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. நாளுக்கு நாள் ஈரோடு கிழக்கு தொகுதியின் அரசியல் களம் முற்றிலுமாக மாறுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று(30/01/2023) இரவு ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் கார்த்தி மற்றும் அவரது அண்ணன் குத்திக் கொலை செய்யப்ப்பட்டுள்ளனர்.
ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன் என்பவரின் மகன்கள் கவுதம் (வயது 30), கார்த்தி (26). இவர்கள் இருவரும் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இதில் கார்த்தி நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக உள்ளார்.
இவர்களுக்கும், அவரது தாய் மாமாவான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்களது வீட்டுக்கு வந்து தகராறு செய்த ஆறுமுகசாமிக்கும் சகோதரர்களுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, அப்போது ஆவேசமடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தினார். கத்திக் குத்துக்கு ஆளான உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதாலும், தொடர்ந்து ரத்தம் வெளியேறிக்கொண்டு இருந்ததாலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தற்போது இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆறுமுகசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளரும் அவரது அண்ணனும் கொலை செய்யப்பட்டிருப்பதால், இந்த கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.