தி.மலை: சும்மா எடுத்துச்செல்லக்கூட ஆள் இல்லை.. வெண்டைக்காய் தோட்டத்தை மாடுவிட்டு மேய்க்கும் விவசாயிகள்!
கொரோனா முழுஊரடங்கால் செங்கம் அருகே வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி விற்பனை ஆகாததால் மாடு விட்டு மேய்த்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும்கொரோனா 2ம் அலைத்தொற்று பரவலால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விற்பனை தேக்கம் அடைந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பாதிப்புக்குள்ளானவர்கள் ஏராளம்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த வெண்டைக்காய் விலை இல்லாததாலும், கமிஷன் மண்டிகள் இல்லாததால் எங்குமே எடுத்துச் செல்ல முடியாத சூழல் நிலை உருவாகி உள்ளது .
வெண்டைகாய் பயிரிட்டுள்ள தோட்டத்தில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை விட்டு மேய்த்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை நம்பி வாழ்வாதாரத்தை சார்ந்துள்ள விவசாயிகள் இத்தகைய கொரோனா பரவலால் காய்கறிகள் விற்பனை ஆகாததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வெண்டைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி நிவாரணம் வழங்கினால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதைப்பற்றி தெரிவித்த விவசாயி ரவி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்தவன் நான் பல தலைமுறையாக விவசாயம் செய்து வருக்கிறோம் தற்சமயம் என்னிடத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பருவத்திற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்துவருகிறோம். தற்போது எங்கள் விலை நிலத்தில் 1 ஏக்கர் வெண்டைக்காய் நட்டுள்ளோம். எங்கள் பகுதியில் விளைவிக்கும் காய்கறிகளை கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். முதல் கொரோனா பரவல் பொழுதே எங்களுக்கு விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இப்போது கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரனமாக கர்நாடகா மாநில முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொது ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வெண்டைக்காய் வாங்க ஆள் இல்லை.
வெண்டைக்காயை மீண்டும் எடுத்து செல்ல மனம் இல்லாததால் கடைகாரரிடம் இலவசமாக எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினேன். அதனை அவர் மறுத்துவிட்டார். இலவசமாகக்கூட எடுத்து செல்ல யாரும் வராததால் வெண்டைக்காய் தோட்டத்தில் மாடுகள் விட்டு மேய்த்து வருகிறேன். தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை புரிந்து கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்