Sexual Harassment | மனதில் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது - நடிகை குஷ்பு
இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷை ட்விட்டரில் டேக் செய்திருக்கிறார் குஷ்பு
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு "சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாலியல் வன்முறை செய்திகளை படிக்க மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆசிரியரை பணி நீக்கம் செய்வது மட்டும் உதவாது, உடனடி விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை தேவை. மனதில் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. அமைச்சர் அன்பில் மகேஷ் இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்..It's shocking to read about sexual harassment in PSBB school in chennai. Suspending the teacher alone will not help,immediate inquiry n stern action,
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 24, 2021
if found guilty,should be taken. Kids cannot go to school with fear on their minds. Hope Minister @Anbil_Mahesh will look into it
என்ன நடந்தது பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில்?
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.
அதில், “நீங்கள் என் பள்ளியின் முன்னாள் மாணவி எனத் தெரிகிறது. நானும் உங்களைப் போல வணிகவியல் மாணவிதான். உங்களிடம் ஒரு புகார் அளிக்க வேண்டும். எங்களது ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பில் பல்வேறு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம். இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
க்ருபாளி அந்தப் புகாரைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான மேலதிக புகார்கள் எழுந்தன. அதில், “என்னுடைய ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்வதற்காக என்னைத் தனியாக சினிமா பார்க்க அழைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார். இறுதியில் ’நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்’ என அருவருக்கும் வகையில் பதில் அனுப்பினார். அவர் உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்’ என தனக்கு அவர் பேசிய ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.
இந்தப் புகார்கள் தவிர ஆன்லைன் வகுப்புக்கு அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வருவது, மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய புகார்களும் எழுந்துள்ளன. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலாக அந்தப்பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இந்த ஆசிரியர் பள்ளியின் பாலியல் குற்றப்புகார்கள் தொடர்பான பிரிவிலும் உறுப்பினராக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
ராஜகோபாலன் மீதான புகாரை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அறிக்கையினைத் தொடர்ந்து புகார்மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜகோபாலன் அளித்துள்ள வாக்குமூலத்தில், 5 வருடங்களாக வாட்சப் வழியாக பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.