Annamalai on ADMK: பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறாரா அண்ணாமலை?
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பதாக வெளியாகும் தகவல், கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உடனான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பதாக கசியும் தகவல், கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக மோதல்:
ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக - பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தான், அண்மையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அதிமுக - பாஜக இடையேயான பிரச்னை மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்து அண்ணாமலை பேசியிருப்பதாக வெளியான தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டம்:
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். இதில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது அவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது
அண்ணாமலை பேச்சு:
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை “தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று கட்சி தலைமை முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாகிகள் இடையே சலசலப்பு:
அண்ணாமலையில் பேச்சால் அதிர்ச்சியடைந்த கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என அண்ணாமலையிடம் வலியுறுத்தினார். அப்போது, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க, நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார் என சொல்லப்படுகிறது . இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அண்ணாமலையின் இந்த பேச்சால் அதிமுக - பாஜக இடையே பிரச்சனை இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.