'10 நிமிடத்தில் 19 இட்லி சாப்பிட்டவருக்கு ரூ.5000' ஈரோட்டில் நடந்த இட்லி உண்ணும் போட்டி!
ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று இட்லியை சாப்பிட்டு பரிசுத்தொகையை வென்றனர்.
நமது மக்களிடம் பீட்சா, பர்கர்களைக் கொண்டு சேர்க்க எண்ணிலடங்கா விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என அனைத்துப் பொது இடங்களிலும் பொதுமக்களையும் மாணவ சமுதாயத்தையும் மயக்கும் வண்ணமயமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன. அந்த விளம்பரங்கள் மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கின்றன என்பதை நிரூபிக்கும்விதமாக, ஏரியாவுக்கு ஒரு மளிகைக் கடை இருப்பதைப்போல, ஏரியாவுக்கு ஒரு துரித உணவுக் கடையை இப்போது தாராளமாகப் பார்க்க முடிகிறது. ஃப்ரைடு ரைஸ், சாட் வகைகள் விற்கிற கடைகளுக்கு இணையக இப்போது பீட்சா, பர்கர் கடைகளும் நகரங்களில் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கூடவே மருந்தகங்களும் நம் வாழ்விடங்களைச் சுற்றி அதிகரித்திருப்பதையும் கவனித்திருக்கலாம். துரித உணவுக் கடைகள் அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகள் பெருகி, மருந்துகளின் வியாபாரமும் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது என்பது மறைமுகமான உண்மை.
இந்நிலையில், துரித உணவுகளுக்கு மாற்றாக உடலுக்கு நன்மை பயக்கும் இட்லி குறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் கேட்டரிங் சார்பில் இட்லி உண்ணும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.19 வயது முதல் 30 வயது வரை, 31 வயது முதல் 40 வயது வரையும், 41 வயது முதல் 50 வயது வரை என்று 3 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 25 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 10 நிமிடங்கள் கொடுக்கப்படும். அந்த பத்து நிமிடங்களுக்குள் எத்தனை இட்லி சாப்பிடுகிறார்கள் என்பதை கணக்கில் கொள்வார்கள். அதனையாடுதுக்கு அதிகபட்ச இட்லி சாப்பிட்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்த இட்லி சாப்பிடும் போட்டியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இட்லிகளை சூடு பறக்க சாப்பிட்டுள்ளனர். ஒரு பத்து நிமிடத்திற்குள் இட்லி சாம்பார் சட்னி என களேபரம் நடந்து ஓய்ந்தது.
நடிகர் வையாபுரி தொடங்கி வைத்த இந்த போட்டி 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் இட்லி உண்ண வேண்டும் என்றும் அதன் பிறகு 5 நிமிடங்கள் வாந்தி எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் போட்டி துவங்கியதும் போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன பங்கேற்று இட்லியை சாப்பிட்டனர். அதிக இட்லி சாப்பிடும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. நடைபெற்ற போட்டியில் 31 முதல் 40 வயது வரை பிரிவில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ரவி 19 இட்லி சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். 41 வயது முதல் 50 வயது வரை பிரிவில் குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராமலிங்கம் 19 இட்லிகள் உண்டு முதல் பரிசான ரூ.5 ஆயிரம் வென்றார். 19 முதல் 30 வயதினர் பிரிவில் கல்லூரி மாணவர் ரவி 18 இட்லிகள் சாப்பிட்டு முதலிடம் பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை பெற்றார். போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு இட்லி சாப்பிட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், பாஸ்ட் புட் மோகத்திலிருந்து மக்களை வெளியேற்றவும் , இட்லியினால் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் எற்படாது என்பதை வலியுறுத்தவே இந்த போட்டியை நடத்தியதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.