உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும்: ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தராத தமிழக காவல் துறையை எதிர்த்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 வாரத்தில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி தராதது அரசின் நிர்வாகத் திறன் இன்மையைக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன?
சுதந்திர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இருந்தது. தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த, காவல்துறை அனுமதி மறுத்தது. அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அளித்த விண்ணப்பத்தில், போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை என்றும் பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ஆம் தேதி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
எனினும் காவல்துறை, அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று (நவ. 1) விசாரணைக்கு வந்தது. இதில், காவல்துறை தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி தராதது அரசின் நிர்வாகத் திறன் இன்மையைக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
Minister Ponmudi: மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு- காரணம் இதுதான்!