kodaikanal: திக்கு முக்காடிய கொடைக்கானல்! நான்கு மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல்!
விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலா தலம்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை:
பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தநிலையில் தற்போது கோடைகால வெயிலை தணிக்கவும், கோடை விடுமுறை ஆரம்பமானதாலும் கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
கோடைகால சீசன்:
தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களும் கோடை சீசன் காலங்கள் ஆகும். வழக்கமாக கொடை சீசன் காலங்களில் தமிழ்நாடு மட்டும் அல்ல அது வெளி மாநிலங்கள் வெளி நாடுகள் ஆகிய பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள். தற்போது கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் படையெடுப்பு தொடங்கியது என்று கூறலாம். இரண்டு நாட்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அவர்களது வாகனங்களின் வருகையும் அதிகரித்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல்:
கொடைக்கானலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வாகனங்கள் வர தொடங்கியுள்ளன. இதனால் கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியில் இருந்தே வாகன நெரிசல் தொடங்கி உள்ளது. சுற்றுலா இடங்கள் உள்ள பகுதிகளில் வாகன நெரிசல் காரணமாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கொடைக்கானலில் போதிய வாகன நிறுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தினாலும், சாலைகள் குறுகிய நிலையில் உள்ளதாலும், வாகன நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதே போல கொடைக்கானல் பிரதான சாலைகளில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் தற்போது நூற்றுக்கணக்கில் முளைத்துள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு கூடுதல் போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.