TN Rain | கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
விடிய விடிய பெய்துவரும் கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பெய்துவரும் கன மழையால், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் , தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதேபோல, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர், வடுவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று இரவு மட்டும் திருவாரூரில் 8 சென்டி மீட்டர் மழையும், நன்னிலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மாவட்த்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் ஏர்போர்ட், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், கண்டன்மெண்ட், பாலக்கரை, கிராப்பட்டி மற்றும் பல்வேறு இடங்களிலும் புறநகர் பகுதிகளான திருவெரும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களிலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நெல்லையில் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதோடு, சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது.