கிழக்கு கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை வழக்கு.. மத்திய மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இப்பகுதிகளில் சரக்கு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கடலோரங்களில் இயற்கையாக மணல் இடம் பெயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் அரிப்பு என்பது பருவநிலை மாற்றத்தின்போது கடல் நீரோட்டத்தால் நடக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் துறைமுக கட்டுமானங்கள் கடல் அரிப்பை அதிகரிப்பதாக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
கடல் அரிப்பு ஏற்படுவதால், கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கடல் அரிப்பைத் தடுத்து மீனவர்களின் குடியிருப்புகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் கடல் அரிப்பு தடுப்பான் கள் அமைப்பது, சுவர்களை எழுப்புவது, கற்களை கொட்டுவது போன்ற பணிகள் பல ஆண்டுகளாக பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையில் உள்ள கடலோர பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வாக "தூண்டில் வளைவு' அமைக்க வேண்டும் ஒரு பகுதி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுவதால் 1950-களில் அன்றைய தொழில்நுட்பத்தில் "தூண்டில் வளைவு' ஒன்று அமைக்கப்பட்டது. அது நிலைபெறாததால் நிலையான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். 1986-ல் தூண்டில் வளைவு அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரூ.90 லட்சத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அதுவும் கைகூடவில்லை. இதற்கிடையே கடல் அரிப்பு சற்று குறைந்ததால் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு நொடர்ந்து கடல் அரிப்பு அதிகமாக உள்ளது என குறிப்பிட்டனர்.
ஆனால் ஒவ்வொரு கடல்சார் பகுதியும் ஒவ்வொரு தன்மை கொண்டது. கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னரே அதற்கு தகுந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்கின்றனர் கடல்சார் ஆய்வாளர்கள்.