TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடக்கமே அதிரடியாக இருந்தது. அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனையடுத்து ஒரு சில நாட்கள் வறண்ட வானிலையே நீடித்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக நவம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தை நோக்கி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (10-11-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 11-11-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (12-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 13ஆம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
இன்று (10-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (11-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















