School Leave: கனமழை எதிரொலி - கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அந்த மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக அங்கு பெய்து வரும் மழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வெளியேறி வருகிறது.
கொட்டி தீர்க்கும் கனமழை:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை இருந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் தொடர் மழை பதிவாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வானிலை எச்சரிக்கை:
மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 04.10.2023 முதல் 09.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
ஏற்கனவே தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மழையும் பெய்து வருவதால், அதில் நினைந்தபடி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றால் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர் மழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
04.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
04.10.2023: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.