Heavy Rain Chennai : தமிழ்நாடு முழுவதும் வெளுத்து வாங்கும் மழை: சென்னையில் விடிய, விடிய கனமழை!
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலானா இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானாது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மட்டும் வில்லிவாக்கத்தில் 162 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீட்டரும், புழலில் 111 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்