எல்லாமே ஆன்லைன்! சான்றிதழ் பெற அலையத் தேவையில்லை! லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி !
Health Certificate: இனி ஆன்லைன் வழியாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tamil Nadu health certificate online apply: வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் என அனைத்து சுகாதார சான்றிதழ்களும், இனி ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சான்றிதழ் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சுகாதார சான்றிதழ் - Health Certificate
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சுகாதார சான்றிதழ் என்பது அத்தியாவசியமாக இருந்து வருகிறது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஆண் மற்றும் பெண் விடுதிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகிய நிறுவனங்களில் முறையாக சுகாதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது சட்டமாக இருக்கிறது.
இது போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக சுகாதார கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து சுகாதார சான்றிதழ்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான, சான்றிதழ் பெறுவது என்பது சற்று சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என நீண்ட நாளாக, பல்வேறு தரப்பினர் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்
இந்தநிலையில் பலதரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று, சுகாதார சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக சான்றிதழ் பெறும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சான்றிதழ் பெற www.tnesevai.tn.gov இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும், சுய உறுதிமொழி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். கணினியில் சுகாதார சான்று உருவாக்கப்படும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேரடி விண்ணப்பங்கள்
நேரடியாக இதுவரை கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டும், சுகாதாரம் உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் கொடுக்கப்படும். இனி நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய நிபந்தனைகள் என்ன?
சான்றிதழ் அச்சு பிரதி எடுத்து, தொழில் மற்றும் கல்வி வளாகத்தில் காட்சிப்படுத்தி இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கள ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால், சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.





















