கரூரில் புதிய பேருந்து நிலையம் 9 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் - மாநகராட்சி
திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூ ஜையினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்கள்.
கரூர் மாநகராட்சி, திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையினை சிறு, குறு நடுத்தர நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிறு, குறு நடுத்தர நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விழாவில் பேசுகையில், தமிழக அரசு மக்களினுடைய தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே அரசு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். சாலை பணிகளாக இருந்தாலும் சரி , பாதாள சாக்கடை திட்டமாக இருந்தாலும் சரி அதனை உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசு நம்முடைய அரசு . நாங்கள் அனைவரும் 10, 15 வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளோம். எந்த நிலையில் இருந்தது என்று நாங்கள் அறிவோம். ஆனால் இந்த ஒரு வருட காலத்திற்குள் பல்வேறு திட்டங்கள் 3 ஆயிரம் கோடி எங்களுக்கே பொறாமையாக உள்ளது.
எந்த நம்பிக்கையில் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்தார்களோ அதே நம்பிக்கைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி தான் எங்கள் ஆட்சி என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இன்று சிஐஐ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம் அதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள் நம்முடைய தலைவர் ஏற்கனவே உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளார்கள். மேலும், சில கோரிக்கைகள் வைத்துள்ளார்கள் அதை நாங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். பெரிய மகிழ்ச்சி அடைந்தார்கள். கரூரை பொறுத்தவரை சிறு தொழில் மாவட்டமாக அதிகமாக இருக்கின்ற பகுதி அது வளர்ச்சி பெற்றால் தான் மாவட்டங்கள் மேலும், வளர்ச்சி பெறும் என்ற வகையில் நம்முடைய தோழர்கள் நம்முடைய ஆட்சியில் முருங்கைக்கு ஆய்வு பூங்கா வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இடம் கொடுத்தால் அதையும் நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம். சிட்கோ இடங்களில் விலை குறைவாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே, இதெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் அது நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதை உடனடியாக நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர் ஆக இந்த பிரச்சனைகளை எங்களால் முடிந்தவரை அதை தீர்த்து தருவோம் என்று சொல்லி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி விழாவில் பேசுகையில், தமிழகத்தினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் குறிப்பாக இந்த 15 மாதத்திற்குள்ளாக கரூர் மாவட்டத்திற்கு 3,000 கோடி அளவிற்கான பணிகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் முதலமைச்சர் வழங்கி இருக்கின்றார்கள். இதற்கு முழு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சி தலைவர், அவர்களுடைய அரசு துறை அதிகாரிகள், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நம்முடைய பகுதிகளுக்கு என்ன வேண்டும் என்ற கோரிக்கைகளை நாம் முன் வைக்கின்ற அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கின்ற முதலமைச்சர். அவர்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் அந்த தேர்தல் காலத்திலே ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றி தந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கக்கூடிய பகுதிகளுக்கு 40 கோடி ரூபாய் நிதிகளை கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்து உடனடியாக அந்தப் பணிக்கான டெண்டர் முடிக்கப்பட்டு, மாநகராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்று இன்று அந்த பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்த கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கான நிதியை ஒதுக்கி தந்த முதலமைச்சர் அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை பணிவன்போடு சமர்ப்பித்து, இந்த திட்டத்தினை விரைந்து முடிப்பதற்கு அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கி, இந்தப் பணிகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை இப்பொழுது தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு பணிகளை தொடங்கி வைத்திருக்கின்ற சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனத்துறை அமைச்சருக்கு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணி என்பது நம்முடைய பகுதி மக்களினுடைய நீண்ட நாள் கோரிக்கை குறிப்பாக இந்த புதிய பேருந்து நிலையம் என்பதற்கு மாநகராட்சியின் உடைய மதிப்பிற்குரிய மேயர், துணை மேயர் மாநகராட்சியின் உடைய மாமன்ற உறுப்பினர்கள் இடத்தில் எங்கள் அனைவரின் சார்பாகவும் உங்களிடம் கேட்டுக் கொள்வது வரக்கூடிய மாநகராட்சி மன்றத்தின் உடைய தீர்மானத்தில் இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் புதிய பேருந்து நிலையம் என்ற பெயரில் மாநகராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் என்று உங்களிடத்திலே அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற கரூர் பேருந்து நிலையம் இப்பொழுது நகரப் பேருந்துகள் என்று செல்லக்கூடிய வகையில் நகரப் பேருந்து நிலையமாகவும், இன்றைய புதிய பேருந்து நிலையம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் என்ற பெயரில் மாநகராட்சியின் உடைய தீர்மானத்தோடு புதிய நவீன வசதிகள் கொண்ட குறிப்பாக 85 பேருந்துகள் நிறுத்தக்கூடிய அளவிற்கு புதிய கட்டமைப்பு வடிவமைப்புகளை கொண்டிருக்கின்றன. இன்னும் சிறப்புகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு இரண்டு கிலோமீட்டர் தான் நடந்து கூட இங்கு வந்து விடலாம். அதே போல ரயில்வே ஜங்ஷனுக்கு போக வேண்டும் என்றால் 3.6 கிலோ மீட்டர் தான் இந்த புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 4.4 கிலோமீட்டர் இவ்வளவு தூரம் தான் மாநகராட்சியின் உடைய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 1.6 கிலோமீட்டர் இப்படி ஒட்டுமொத்தமாக மையத்தின் அதாவது கரூர் மாநகராட்சியின் உடைய மையப் பகுதியில் வந்து செல்லக்கூடிய பொது மக்களுக்கு எளிதில் வந்து செல்லக்கூடிய அளவிற்கு இந்த பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கி இருக்கின்றார்கள்.
சில பேர் சில கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒன்றே ஒன்று மட்டும் தான் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சி பொறுப்பேற்ற இந்த 15 மாத காலத்தில் 3 ஆயிரம் கோடி அளவிற்கு கரூருக்கு வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்கள் என்று சொன்னால் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடி திட்டங்களை முதலமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு வழங்க இருக்கின்றார்கள். எனவே, நம்முடைய பகுதி மக்கள் அனைவரும் என்றும் முதலமைச்சர் அவர்களுக்கு அரணாக இருந்திட வேண்டும் என்று மீண்டும் அன்போடு கேட்டுக் கொண்டு இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில் பங்கு பெற்றுக் கொண்டுள்ள அமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.