தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் - ஆளுநர் தமிழிசை
தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை - ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது.
ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
அனைத்து மாநில நாட்களையும் ஆளுநர் மாளிகையில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும். பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது. புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும் படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது. ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். ஆளுநர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால் தான் திறந்துள்ளோம்.
எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன். பிரச்சனை என்றால் என்னிடம் நேரில் வந்து பேசுங்கள். புதுச்சேரியில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள். தெலுங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள். இது அந்தந்த மாநில பிரச்சனை. தமிழக மசோதாவை அந்த ஆளுநர் எதிர்கொள்கிறார். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. புதுவையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுநர் என்ற இணைப்பு சரியாக இருக்க வேண்டும். எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதலமைச்சருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்.
அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுச்சேரி தலைமைச் செயலரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது. முதலமைச்சர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், தமிழகத்திலும் முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலுங்கானாவிலும் இதே கருத்தையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும் போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுச்சேரியில் இருக்க வேண்டும். அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். பயங்கரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.